பயன்படுத்தப்பட்டு வந்த, வில்பத்து தேசிய பூங்காவினூடாகச் செல்லும் பாதையை ஐந்து நாட்களுக்குத் திறந்து விடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்கப் பக்தர்கள் குழுவொன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
முள்ளிகுளம் கிராமத்திற்குள் நுழையும் பிரதான வீதிக்கு அருகில் ஜூலை 07ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முள்ளிகுளம், பல்லேகண்டல் மற்றும் காயாக்குழி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கத்தோலிக்கப் பக்தர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்லேகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா ஜூலை 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால், அதில் கலந்துகொள்வதற்காக குறித்த பாதையை மீண்டும் திறந்து தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றைய தினமே தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரனிடம் அவர்கள் கையளித்திருந்தனர்.
நீதிமன்றத் தீர்ப்பொன்றைச் சுட்டிக்காட்டி, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்னர் தமக்கு அறிவித்ததால், இம்முறை தமது பாரம்பரிய பாதையூடாக ஆலயத்திற்குச் செல்ல முடியாமல் போயுள்ளதாகவும், இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அங்கு மேலும் வெளிப்படுத்தினர்.
பல்லேகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்வதற்காக முள்ளிகுளம் பகுதியிலிருந்து செல்லும் பாதையைப் பயன்படுத்துவது உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவான முறையில் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் சூழலியலாளர்கள், குறித்த பாதையானது தற்போது இயற்கையாகவே மீண்டும் காடுகளுடன் ஒன்றிணைந்து வரும் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் வலயம் எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பொன்றின் போது, வருடாந்தப் புனிதரின் திருவிழாவை தொல்பழங்கால பாரம்பரிய முறைப்படி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகப் பிரதேச கத்தோலிக்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த முள்ளிகுளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெரன்ஸ் குலாஸ் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், சுமார் 30 கிலோமீற்றர் தூரம் பயணிப்பதன் மூலம் பல்லேகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்தைச் சென்றடையக்கூடிய பாரம்பரிய பாதை முடக்கப்பட்டுள்ளதால், சுமார் 250 கிலோமீற்றர் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் இங்கிருந்து பல்லேகண்டல் ஆலயத்திற்குச் செல்வதற்கு மறிச்சுக்கட்டி - புத்தளம் வீதியைப் பயன்படுத்தினால், வெறும் 30 கிலோமீற்றர் தூரமே காணப்படுகின்றது. அவ்வாறன்றி அனுராதபுரம், புத்தளம் ஊடாக நாங்கள் சுற்றிச் சென்றால், சுமார் 250 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதால், இவ்வாறு சுற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பாதையைத் திறந்து எமக்குச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி நிற்கின்றோம்."
கத்தோலிக்கப் பக்தர்கள் குறிப்பிடுவது போன்று, 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் யாத்திரீகர்களுக்குத் தமது பாரம்பரிய பாதையில் பயணிக்க முடியாமல் போனது 1983 முதல் 2009 வரையான யுத்த காலத்தில் மாத்திரமேயாகும்.
வருடாந்தம் வருகை தரும் சுமார் முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள், தேசிய பூங்காவின் சட்டதிட்டங்களை மதிக்காது அங்கு நடமாடுவதாகச் சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.



