உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள், மிக மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர் என்பது அவர்களது பிரேத பரிசோதனைகளின் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மரண பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம், தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே இந்த அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 24 பேரின் பிரேத பரிசோதனைகள், ஐவர் அடங்கிய தடயவியல் மருத்துவக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய, 14 மரணங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களினாலும், மேலும் 9 மரணங்கள் கடுமையான தாக்குதல்களினாலும் சம்பவித்துள்ளன என மரண பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிறைச்சாலை காவலரின் மரணம் தொடர்பில் இன்றைய தினம் (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான மரண பரிசோதனை சாட்சியப் பதிவுகளும் நிறைவடைந்துள்ளன.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 28 சடலங்களில் 24 பேரின் மரண பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டு, சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 4 சடலங்கள் தொடர்பான மரண பரிசோதனைகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நால்வரில் இந்திய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக, வைத்தியர் சுஜீவ விக்ரமநாயக்கவின் தலைமையில் ஐவர் அடங்கிய தடயவியல் மருத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் வைத்தியர் பிரசன்ன அப்புஹாமி, வைத்தியர் சமந்த விஜேரத்ன, வைத்தியர் சமின்த ராஜபக்ஷ மற்றும் வைத்தியர் ரமேஷ் அக்கியாவன்ன ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகளின் பிரேத பரிசோதனைகளை நடத்தி, அந்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலனி பெரேரா கடந்த 7ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மறுபுறம், இந்த வன்முறைச் சம்பவத்தை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகம் குற்றப் பிரதேசமாக (Crime Scene) கருதப்படுவதனால், அங்கு கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைப்பது பொருத்தமற்றது என சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவத்தினால் சிறைச்சாலை வளாகத்திற்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அச்சேத விபரங்கள் குறித்த இறுதி மதிப்பீட்டு அறிக்கை இதுவரை தயாரிக்கப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


