இறுதி வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது, இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற முடியுமா என்பது குறித்து வட மாகாண மீனவர் சங்கத் தலைவர்கள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நீண்டகாலமாக நிலவும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்காக எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை மீன்பிடி அமைச்சு அறிவித்திருந்தது.
குறிப்பாக, சட்டவிரோதமான மற்றும் கடலடி வளங்களை அழிக்கும் 'அடிமடி வலை' (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் ஊடுருவுவதால், வட பகுதி கடல் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரமும் சீர்குலைந்து வருகிறது. இதனைத் தடுப்பதும் கடல் எல்லையைப் பாதுகாப்பதுமே இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் முதன்மை நோக்கமாகும்.
பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்குமா? வட பகுதி மீனவர்கள் சந்தேகம்
இது குறித்து மன்னாரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வட மாகாண மீனவர் சம்மேளனத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான என். எம். ஆலம், இந்தச் சந்திப்பின் மூலம் எதிர்பார்க்கும் முதன்மை நோக்கம் நிறைவேறுமா என்பது சந்தேகமே எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவுக்குச் செல்லும் உத்தியோகபூர்வ தூதுக்குழுவினால், இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைய மாட்டார்கள் என்ற எழுத்துப்பூர்வமான அல்லது உறுதியான வாக்குறுதியை இந்திய அரசிடமிருந்து பெற முடியுமா என்பதே இங்குள்ள முக்கிய கேள்வியாகும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாட்டு மீனவர் சங்கங்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
எனினும், "எமது கடற்பரப்பிற்குள் வரும் இந்திய, குறிப்பதாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட இழுவைப்படகு (Trawler) முறையை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும். அதை உறுதிப்படுத்தினால் மட்டுமே மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் பலன் இருக்கும்" என வட பகுதி மீனவ பிரதிநிதிகள் வலியுறுத்துகின்றனர்.
எல்லை தாண்டுபவர்களுக்குத் தமிழ்நாட்டில் நிதியுதவியா?
அண்டை நாடுகளின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள தமிழ்நாடு மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி நிதியுதவியை 500 ரூபாவிலிருந்து 600 ரூபாவாக (மாதமொன்றிற்கு 18,000 ரூபா) உயர்த்தவுள்ளதாகத் தமிழ்நாடு மீன்பிடித்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கை குறித்து விமர்சித்த என். எம். ஆலம், சட்டவிரோதமாக எல்லை தாண்டி கைது செய்யப்படும் மீனவர்களுக்குப் அம்மாநில அரசு நிதியுதவி அளிப்பது, அவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கு மறைமுகமாக ஊக்குவிப்பது போல் உள்ளதாகக் குற்றம் சாட்டினார். சர்வதேச ரீதியில் தவறு செய்து சிறையிலிருக்கும் ஒரு தரப்பிற்கு அரசு நிதியுதவி அளிப்பது எவ்விதத்தில் நியாயமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்தின் நிலைப்ப்பாடு மற்றும் பின்னணி
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்கிரம் மிஸ்ரி கொழும்பு வந்திருந்த போது, இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பொறிமுறை பற்றியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பது குறித்தும் கலந்துரையாடியிருந்தார். அத்துடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் இந்தியத் தரப்பு கோரியிருந்தது.
முன்னதாக, தில்லியளவில் நடைபெற்ற அரச தலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்திருந்த தற்போதைய அரசு, மீண்டும் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு ஆயத்தமாகி வருகிறது.
எனினும், இந்தியத் தரப்பிலிருந்து அத்துமீறல்களைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கானத் தடைகள் விதிக்கப்படாத வரை, அதிகாரிகள் மட்டத்திலான இந்தப் பேச்சுவார்த்தைகள் வட பகுதி மீனவர்களுக்குத் நிலையான தீர்வைத் தருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


