கூட்டத்தொடர் வாரத்தின் அமர்வுகள் இன்றிலிருந்து (08) ஆரம்பமாகவுள்ளன.
இன்று முதல் வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடும் என நாடாளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 09.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், இன்றைய தினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் 2489/22 மற்றும் 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரு ஒழுங்குவிதிகள் ஒப்புதலுக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதன்பின்னர், எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாளை (09) பாதுகாப்புப் படை பிரதானி (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
செப்டம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை பெண்கள் வலுவூட்டல் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஒப்புதலுக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்றச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை 7 தனிநபர் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனிடையே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றச் செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன தெரிவித்துள்ளார்.


