மாறி, பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றைய தினமும் (08) சிறியளவிலான பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும், கைதிகள் சிறைக்கூடங்களை விட்டு வெளியே வந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், நீர்கொழும்பு கோட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேராவின் தலையீட்டினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கைதிகள் மீண்டும் சிறைக்கூடங்களுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் (08) முற்பகலும் நீர்கொழும்பு சிறைச்சாலையைச் சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு
இதேவேளை, மோதல் இடம்பெற்ற தினத்தன்று நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிக வசம் இருந்த 'ரிப்பீட்டர்' (Repeater) ரக துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியில் அதற்கு அருகாமையிலிருந்து 9 மில்லிமீற்றர் (9mm) ரக மெகசின் ஒன்றும் 10 தோட்டாக்களும் புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.
பெண் நீதவானின் விசேட ஸ்தல பரிசோதனை
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான ஸ்தல பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நேற்று (07) பிற்பகல் 3.15 மணியளவில் நீர்கொழும்பு நீதவான் சிறைச்சாலை வளாகத்திற்குச் சென்றுள்ளார்.
சிறைச்சாலையில் இன்னமும் ஒரு தொகுதி கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) பாதுகாப்பிற்கு மத்தியிலேயே அவர் சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது, சிறைச்சாலையின் பிரதான வாயில்கள், கைதிகள் உயிரிழந்த இடங்கள், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடங்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட இடங்களை நீதவான் நேரில் பார்வையிட்டுள்ளார். அத்துடன், சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியசாலையும் அவராற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கைதிகளால் கைப்பற்றப்பட்டிருந்த டி-56 (T-56) ரக துப்பாக்கியும் சோதனையிடப்பட்டது.
எனினும், சிறைச்சாலையினுள் இன்னமும் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால், ஸ்தல பரிசோதனையின் பாதியளவு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய கைதிகள் அங்கிருந்து அகற்றப்பட்டதன் பின்னர் மீதிப் பகுதிகள் பார்வையிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
63 வீதமானோர் போதைப்பொருள் கைதிகள்
இந்த வன்முறைச் சூழ்நிலை ஏற்படும் போது நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் கைதிகளின் எண்ணிக்கை அதன் கொள்ளளவை விடவும் மிக அதிகமாகக் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 63 வீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கைதிகள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் அவர்களின் உறவினர்கள் இன்றைய தினமும் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கும், மோதலில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிகிச்சை பெற்று வரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கும் முன்பாகக் குழுமியிருந்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் அவர்கள் ஆயுதமற்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் காரணமாக, இதுவரை 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைகளில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ள அதேவேளை, பெருமளவிலான கைதிகள் தற்போது ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளனர்.


