வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை மற்றும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாட்டின் முன்னணி அமைப்பு அரசாங்கம் மீது பலத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா இது குறித்துச் சுட்டிக்காட்டுகையில்; 27 உயிர்களைப் பலிகொண்ட நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவ்வாறு மாற்றப்பட்ட கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ஜூலை 07ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படுத்திய சுதேஷ் நந்திமால் சில்வா, இந்தத் தாக்குதல்கள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியும் அவர்கள் அதனைச் செவிமடுக்காதமையினாலேயே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
"நாங்கள் இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள், விசேடமாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்குத் தனிப்பட்ட ரீதியில் தெளிவுபடுத்தியிருந்தோம். அதேபோன்று அமைச்சு மட்டத்தில் சில செயலாளர்களுக்கும் விடயத்தைக் கொண்டு சென்றோம். இவ்வாறு கைதிகள் தாக்கப்படுகிறார்கள் என்றும், ஏதேனும் ஒரு வகையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டால் அது அரசாங்கத்திற்குப் பெரும் பிரச்சினையாகவும் கரும்புள்ளியாகவும் மாறும் என்றும் எச்சரித்திருந்தோம். ஆனால், அவர்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளவுமில்லை, இதற்குச் செவிசாய்க்கவுமில்லை."
முகநூல் (Facebook) ஊடாகக் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா, இந்த படுகொலைச் சம்பவம் அமைச்சரின் அனுசரணையுடன் தான் இடம்பெற்றதா என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரிடம் கடுமையான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
"இப்போது இந்த உத்தியோகத்தில் மனிதர்களைக் கொலை செய்ய முடியுமா? இந்த நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா? நாங்கள் எழுப்பும் கேள்வி அதுதான். இதுதான் நாட்டின் சட்டமா? எனவே, அமைச்சரே! உங்களுடைய அறிதலுடனோ அல்லது அறியாமலோ தான் இந்த படுகொலை நடந்திருக்க வேண்டும். இப்போது இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என தயவோடு கூறிக்கொள்கிறோம்."
வெலிக்கடை சிறைச்சாலையினுள் வைத்து ஜூலை 07ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட அவிஷ்க என்ற கைதியின் மரணம் தொடர்பில், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா வெளியிட்டுள்ள விபரங்கள் அடங்கிய காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது...


