70 சதவீதத்திற்கும் அதிகமானவை நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் அன்றாட வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக (Budget Support) நேரடியாகச் செலவிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதிச் சீர்திருத்தங்களின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையத் தொடங்கியுள்ள போதிலும், உள்கட்டமைப்பு அல்லது உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை விரைவுபடுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் அன்றாட நிதிச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இன்னமும் வெளிநாட்டுத் பங்காளிகளிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளதை இந்தத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.
வெளிநாட்டுக் கடன் பகிர்வும் பிரதான கடன் வழங்குநர்களும்
கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் நாட்டிற்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கடன்களின் அளவு 1.78 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் 71 சதவீதமானது வரவுசெலவுத் திட்ட ஆதரவிற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய துறைகளுக்கு மிகக் குறைந்த சதவீதமே எஞ்சியுள்ளது.
-
அபிவிருத்தித் துறைகளுக்குக் கிடைத்த சொற்பத் தொகை: மனிதாபிமான உதவிகளுக்காக 4.6 சதவீதமும், சுற்றுலாத் திட்டங்களுக்காக 4 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மாணப் பணிகளுக்காக மொத்த நிதி ஒதுக்கீட்டில் வெறும் 3 சதவீதம் போன்ற மிகக் குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது.
-
கடன் வழங்கிய நிறுவனங்கள்: 2025ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கடன்களில் பாதியளவை (50%) சர்வதேச நாணய நிதியம் (IMF) வழங்கியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 29 சதவீத பங்களிப்பையும், உலக வங்கி (World Bank) 11 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளன.
புதிய கடன் உடன்படிக்கைகளும் உள்நாட்டுச் சந்தை உத்தியும்
2025ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 1.23 பில்லியன் டொலர் பெறுமதியான 14 புதிய வெளிநாட்டுத் கடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. அதிலும் 706.1 மில்லியன் டொலர்கள் (அதாவது புதிய கடன்களில் 58%) வரவுசெலவுத் திட்ட ஆதரவிற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் தனது ஒட்டுமொத்தக் கடன் தேவையை கணிசமான அளவில் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது.
-
கடன் எல்லைகளைக் கட்டுப்படுத்தல்: ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் 4 டிரில்லியன் ரூபா வரை கடன் பெறுவதற்கு நாடாளுமன்ற அனுமதி கிடைத்திருந்த போதிலும், அரசாங்கம் உண்மையாகவே 1.96 டிரில்லியன் ரூபா கடனை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது. பொது நிதி நிலைமை வலுவடைந்தமை மற்றும் அரசாங்கத்திடம் காணப்பட்ட பண இருப்புக்கள் (Cash Reserves) இதற்கு முக்கிய காரணங்களாகும் எனத் தெரிவிக்கும் அமைச்சு, இது 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரச கடன் மேலாண்மைச் சட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்துப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
-
உள்நாட்டுச் சந்தையில் தங்கியிருத்தல்: அந்நியச் செலாவணி மற்றும் வட்டி வீத அபாயங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் உள்நாட்டு நிதிச் சந்தையை பிரதான உத்தியாகப் பயன்படுத்தியுள்ளது. இதற்கமைய, திறைசேரிப் பிணைமுறிகளை (Treasury Bonds) வழங்குவதன் மூலம் 2.4 டிரில்லியன் ரூபாவும், உள்நாட்டு டொலர் பிணைமுறிகள் மூலம் 50 மில்லியன் டொலர்களும் (சுமார் 15 பில்லியன் ரூபா) ஈட்டப்பட்டுள்ளன.
பொருளாதார ஆய்வாளர்களின் பார்வை: பொருளாதாரம் வழமைக்குத் திரும்பி வரும் இக்காலகட்டத்தில், வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிரப்புவதற்காக வெளிநாட்டுக் கடன்களை இவ்வாறு செலவிடுவதன் மூலம் உடனடி நிதி நிவாரணம் கிடைத்த போதிலும், நீண்டகால பொருளாதார வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஏற்படுத்தும் மூலதனத் துறைகளை நோக்கி வெளிநாட்டு வளங்கள் சென்றடையாமை குறித்து பொருளாதார ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடன் மறுசீரமைப்பிற்கு அப்பால் இலங்கையின் எதிர்கால சவாலாக இருப்பது, அரசாங்கத்தின் கணக்குகளைச் சமநிலைப்படுத்துவதைத் தாண்டி, நாட்டின் போட்டித்தன்மையை உயர்த்தும் நிலையான முதலீடுகளை நோக்கி இந்த வெளிநாட்டு நிதியங்களை படிப்படியாக எவ்வாறு திருப்புவது என்பதாகும்.


