Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

OMP விடுத்த கோரிக்கைக்கு கிழக்கில் கடும் எதிர்ப்பு!

T

The Leader Desk

ஜூலை 6, 2026 • 3:13 PM

OMP விடுத்த கோரிக்கைக்கு கிழக்கில் கடும் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறவினர்களின் விபரங்களை மீண்டும் கோரும் அதிகாரிகளை கண்டித்து கிழக்கு மாகாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • சாட்சியாளர்களாக நாம் இருந்தும், இதுவரை எமது சாட்சியங்கள் 12 ஆணைக்குழுக்களினால் தரவுகளுக்காக (Data) மாத்திரமே பெறப்பட்டுள்ளன.
  • அடுத்த கட்டத்திற்குச் செல்ல எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும்.
எழுத்து அளவு:

உறவினர்களின் விபரங்களை மீண்டும் கோரும் அதிகாரிகளை கண்டித்து கிழக்கு மாகாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் பணிகள், ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு மாவட்ட செயலகத்தில் (District Secretariat) நடைபெறும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் - OMP சில பெற்றோர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் OMP எனப்படும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது கடுமையான நம்பிக்கையீனத்தை வெளியிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்ட அன்னைவரின் போராட்டத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

dis 2

"எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்", "எமது உறவுகள் எமக்கு வேண்டும்", "இராணுவத்தை நம்பி சரணடைந்த எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது?", "இனப்படுகொலையை நிறுத்து" போன்ற முழக்கங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.

இலங்கை முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) கிடைக்கப் பெற்றுள்ள சுமார் 22,000 முறைப்பாடுகளில், வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலிருந்தும் 6,000 முதல் 7,000 வரையான முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளதாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூக ஆர்வலர்கள் யுத்தப் பாதிப்புக்குள்ளானோர் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது OMP அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்திருந்தார்.

நீதிமன்றங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு (நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு) அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வடக்கு கிழக்கில் இதுவரை முறைப்பாடு செய்யாதவர்கள் எவரேனும் இருப்பின், அது குறித்து தமது நிறுவனத்திற்கு அறிவிக்குமாறும் OMP தலைவர் மேலும் கோரிக்கை விடுத்திருந்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமலநாயகி அமல்ராஜா ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பாக 12 ஆணைக்குழுக்களிடம் (Commissions) சாட்சியமளித்துள்ள போதிலும் தமக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

dis 3

"பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள், பிள்ளைகள், சிறுவர்கள் மற்றும் வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்ட எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை கூறப்பட வேண்டும். சாட்சியாளர்களாக நாம் இருந்தும், இதுவரை எமது சாட்சியங்கள் 12 ஆணைக்குழுக்களினால் தரவுகளுக்காக (Data) மாத்திரமே பெறப்பட்டுள்ளன. அந்தத் தரவுகளைப் பெற்றுக்கொண்டு எமக்கு நீதியை வழங்க அவர்கள் மறுத்து வருகின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிய வேண்டும். அடுத்த கட்டத்திற்குச் செல்ல எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எமது மனதிற்கு நிம்மதி கிடைக்கும். அதைச் செய்யாமல் பணக் காசோலைகளை (Cheques) வழங்கிவிட்டு, 'மறப்போம்.. மன்னிப்போம்..' என்று இருப்பதற்கு, நாம் இழந்தது மிருகங்களையோ, பொருட்களையோ அல்லது தங்க நகைகளையோ அல்ல. நாம் இழந்தது விலைமதிப்பற்ற மனித உயிர்களை" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

dis 4

வடக்கு நடத்தப்பட்ட சிவில் யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் இரத்தக் கறைகளுடன் முடிவுக்கு வந்த நாள் முதல், தமது கணவர்கள், மகள்கள், மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட உறவினர்களைத் தேடி, 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் போராட்டங்களை ஆரம்பித்த தமிழ் பெற்றோர்களில் குறைந்தது 400 பேர் இதுவரை நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளனர்.

யுத்த முடிவில் அரச இராணுவத்திடம் (அரசாங்கப் படையினரிடம்) சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமது உறவினர்களுக்கு நாட்டிற்குள் நீதி கிடைக்காது என குற்றம் சுமத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம், கடந்த சுமார் 17 வருடங்களாக தமது உறவுகளுக்கான நீதி வேண்டி சர்வதேச தலையீட்டை (International Intervention) ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...