தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தொல்பொருள் இருவாரக் காலமும்' (Archaeology Fortnight) நாளை (07) முதல் ஆரம்பமாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்ட புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனம் கண்டு, அவற்றின் அகழ்வாராய்ச்சி, களஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த முழுமையான திட்டத்தின் கீழ் 1,000 தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்படவுள்ளதுடன், நாளை ஆரம்பமாகும் தொல்பொருள் இருவாரக் காலப்பகுதியில், அதன் முதற்கட்டமாக இனம் காணப்பட்ட 100 இடங்களில் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு "பிரஜைகள் பாதுகாப்பு குழுக்கள்" (Community Conservation Committees) அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் நேரடித் தலையீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இது குறித்து பிரதி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"ஜூலை மாதம் 07 ஆம் திகதி தொல்பொருள் இருவாரக் காலம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இதன் பிரதான கருப்பொருளாக 'பாரம்பரியத்திற்கு உயிர்' (Urumayata Jeewayak) என்பது பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது நாட்டின் வரலாற்று மற்றும் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களை இனம் கண்டு, பாதுகாப்பு மற்றும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக, ஆயிரம் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பிரதான திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, நாளை முதல் 100 இடங்களை இனம் கண்டு பணிகளைத் தொடங்கவுள்ளோம்.
இத்தகைய இடங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் ஓரளவுக்குக் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையைக் கருத்திற்கொண்டு, தொல்பொருள் இடங்களை முறையாகப் பெயரிட்டு, அப்பகுதி மக்களின் பங்களிப்புடன் 'பிரஜைகள் பாதுகாப்பு குழுக்களை' உருவாக்கத் தீர்மானித்துள்ளோம். இக்குழுக்கள் மூலமே அங்கு அகழ்வாராய்ச்சியா, களஆய்வா அல்லது பாதுகாப்புப் பணிகளா முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் பெறப்படும். தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் பங்களிப்புடன் இது நடக்கும். பொதுமக்கள் இந்த வரலாற்று இடங்களுடன் இணையும் போது, அவற்றை இன்னும் காத்திரமாகப் பாதுகாக்க முடியும் என நாம் நம்புகின்றோம்."


