7 அதிகாரப்பூர்வ வழித்தடங்கள் இயங்கும்
கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் வரை சேவைகளை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை
நவீன பொதுப் போக்குவரத்து முறைமைக்காக 'மெட்ரோ' பஸ் சேவை
நகரப் போக்குவரத்து அமைப்பை முறைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்குத் திறமையான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முன்மொழியப்பட்ட 'மெட்ரோ (Metro)' பஸ் சேவை, வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கித் தொடங்கப்படவுள்ளது.
நகர வீதி நெரிசலைக் குறைத்தல், தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சர்வதேசத் தரத்திற்கு அமைவான பயணிகள் சேவையை வழங்குதல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
தற்போது 'மெட்ரோ பஸ் கம்பனி' வசம் 121 தரைதட்டையான (Low-floor) பஸ்கள் உள்ளன. இதில்:
-
'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் கிடைத்த 10 பஸ்கள்,
-
ஜப்பானின் நன்கொடை மூலம் கிடைத்த 7 பஸ்கள்,
-
அரசாங்கத்தால் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 104 பஸ்கள்
என்பன அடங்கும். இவ்வருட இறுதிக்குள் மொத்தப் பஸ்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் கம்பனியின் தலைவர் யூ.பி. திலகரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்டி, காலி, யாழ்ப்பாணத்திற்கு விரிவாக்கம் மற்றும் அமைச்சரவை அனுமதி
கொழும்பு நகரத்திற்கு அப்பாலுள்ள பிரதான மாகாணப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா மையங்களைக் இலக்காகக் கொண்டு, மெட்ரோ பஸ் திட்டத்தின் முதற்கட்டம் கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் அமல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளுக்கான பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026 மார்ச் 06 ஆம் திகதி 100 பஸ்களைக் கொள்முதல் செய்வதற்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக, அரசாங்கத்தின் கொள்முதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 50% கூடுதல் ஆர்டராக (Repeat Order) மேலும் 50 தரைதட்டையான, சொகுசு பஸ்களைக் கொள்முதல் செய்யப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பயண வழித்தடங்களின் கட்டமைப்பு
பயணிகள் எளிதாக வழித்தடங்களை அடையாளம் காண்பதற்காகச் சிறப்பு வண்ணக் குறியீடுகளும் (Color Codes) 'CM' குறியீட்டு முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பிரதான வழிகளினூடாகச் சேவைகள் தொடங்கப்படும்:
-
CM 01 (நீல வழித்தடம்): மாக்கம்புரவிலிருந்து பன்னிபிட்டிய, ராஜகிரிய ஊடாக புறக்கோட்டை வரை (23.3 கி.மீ)
-
CM 02 (மஞ்சள் வழித்தடம்): மில்லேனியம் சிட்டியிலிருந்து மாலம்பே, ராஜகிரிய ஊடாக கொழும்பு கோட்டை வரை (22.3 கி.மீ)
-
CM 03 (இண்டிகோ வழித்தடம்): கடவத்தையிலிருந்து பொரளை ஊடாக மாக்கம்புர வரை (34.8 கி.மீ)
-
CM 04 (நாரஞ்சை வழித்தடம்): தெமட்டகொடயிலிருந்து மொரட்டுவை ஊடாக பாணந்துறை வரை (28.7 கி.மீ)
-
CM 05 (ஊதா வழித்தடம்): பத்தரமுல்லையிலிருந்து வத்தளை ஊடாக ஏகலை வரை (29.9 கி.மீ)
-
CM 06 (இளம்பச்சை வழித்தடம்): கொள்ளுப்பிட்டி வட்டப் பாதை (14 கி.மீ)
-
CM 08 (அடர்பச்சை வழித்தடம்): கஸ்பாவையிலிருந்து பிலியந்தலை, நாரஹேன்பிட்ட ஊடாக புறக்கோட்டை வரை (35.7 கி.மீ)
(நிட்டம்புவையிலிருந்து கொழும்பு துறைமுக நகரம்/Port City வரை இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள CM 07 வழித்தடம் விரைவில் அறிவிக்கப்படும்).
நவீன வசதிகளும் கட்டண முறையும்
முழுமையாக குளிரூட்டப்பட்ட (A/C) இந்த பஸ்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் எளிதாக ஏறி இறங்கும் வகையில் தரைதட்டையான (Low-floor) தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக 24/7 இயங்கும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பயணிகள் 'LMT GO App' கைபேசி செயலியின் QR குறியீடு மூலமாகவோ அல்லது கிரெடிட்/டெபிட் (Credit/Debit) கார்டுகள் மூலமாகவோ கட்டணத்தைச் செலுத்தலாம்.
மேலும், வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) 799 ரூபாய் நிலையான கட்டணத்தில் எந்தவொரு வழித்தடத்திலும் எல்லையற்ற வகையில் பயணிப்பதற்கான விசேட தொகுப்பும் (Unlimited Weekend Package) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டணச் சீட்டைப் பெறும் பெரியவர் ஒருவருடன் பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும்.


