இயந்திரப் பொருத்தப்பாட்டைப் பரிசோதிக்க பாராளுமன்ற அனுமதி
ஆண்டுக்கு 2,500 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த களுவாஞ்சிகுடியில் தொடங்கும் மோட்டார் சைக்கிள் பாதை முன்னோடித் திட்டம்
அதிவேக நெடுஞ்சாலை ஆசனப் பட்டி விதியும் 3 மாத அவகாசமும்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொடிய வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு நடவடிக்கையாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் (Highways) பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிப்பவர்கள் ஆசனப் பட்டிகளை (Seat Belts) அணிவதைக் கட்டாயமாக்கப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலைகள்) விதியைத் திருத்தி வெளியிடப்பட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உற்பத்தியாளர்களால் ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு அப்பசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசம் 2026 செப்டம்பர் 19 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவை வாகனங்களின் தகுதிச் சான்றிழ் சோதனைக்கு புதிய உத்தரவு
சமீபத்தில் நடந்த கடுமையான வீதி விபத்துகள் பலவற்றிற்கு வாகனங்களில் காணப்பட்ட இயந்திரக் கோளாறுகள் மற்றும் செலுத்துகைத் தகுதியின்மையே காரணம் என மோட்டார் வாகனப் பரிசோதகர்களின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்குத் தீர்வாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது இலங்கை போக்குவரத்துச் சபை ஆகியவற்றின் கீழ் ஒழுங்குபடுத்தப்படும்:
-
பயணிகள் போக்குவரத்து
-
பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து
-
பணிமனை சேவை மற்றும் வாடகை அடிப்படையில் இயங்கும் வாகனங்கள்
ஆகியவற்றின் தகுதியை பல்வேறு வழிகளில் பரிசோதிக்கும் முறையான பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளது. இதற்காக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட "2026 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (பரிசோதனை) விதிகளை" பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்குத் தனிப் பாதை முறைமை
இதேவேளை, நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்ட சிறப்புப் பாதைகளை (Dedicated Motorcycle Lanes) அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் முன்னோடித் திட்டம் (Pilot Project) களுவாஞ்சிகுடி நகரில் இருந்து தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் ஆண்டுதோறும் நிகழும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் சார்ந்தவை எனக் சுட்டிக்காட்டிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 2025 ஆம் ஆண்டில் மட்டும் கொடிய விபத்துகளால் சுமார் 2,750 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் சாதாரண வீதி அடையாளக் குறியீடுகளுக்கு மேலதிகமாக, பௌதிக வீதித் தடைகளை (Road Breakers/Barriers) பயன்படுத்தி மோட்டார் சைக்கிள் பாதை தனிமைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


