Tamil Leader News
முக்கியம்
ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●
செய்திகள்

ஹேமசிறி – பூஜித் தீர்ப்பு; மலல்கொட குழு அறிக்கை மற்றும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி நிலந்தவின் சாட்சியம் பற்றிய பகுப்பாய்வு!

T

The Leader Desk

ஆகஸ்ட் 4, 2026 • 5:08 AM

ஹேமசிறி – பூஜித் தீர்ப்பு; மலல்கொட குழு அறிக்கை மற்றும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி நிலந்தவின் சாட்சியம் பற்றிய பகுப்பாய்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறிப்பாக, அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய சாட்சியங்களும் முந்தைய புலனாய்வு அறிவிப்புகளும் இந்த நீதித்துறை நடவடிக்கைகளில் முதன்மைச் காரணியாக அமைந்தன.
  • தாக்குதலுக்கு முந்தைய 5 நாட்கள்: காத்தான்குடி வெடிப்பும் புலனாய்வு அறிவிப்புகளும் 2019 ஏப்ரல் 16 ஆம் திகதி இரவன்று காத்தான்குடி, தாலங்குடா பகுதியில் உள்ள ஒரு காணியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் குறித்து அரச புலனாய்வுச் சேவை உடனடியாக விசாரணைகளைத் தொடங்கியது.
  • தவிர, இவ்விசாரணை காத்தான்குடி பொலிஸாரால் மட்டும் செய்ய முடியாதளவு சிக்கலானது என்பதால், இதனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு ஏப்ரல் 19 ஆம் திகதி புலனாய்வுப் பிரதானி பொலிஸ் மா அதிபரிடம் கோரினார்.
  • ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 4:12 மணிக்குக் கிடைத்த தகவலின்படி, சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இந்தியத் தூதரகம் உட்பட 8 இடங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

இரவு வரை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட செய்திகள் மற்றும் அதன் சட்டப் பின்னணி

நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பங்களிப்பு

பாஸ்கா (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக நிலுவையிலிருந்த வழக்குகள், இது தொடர்பான மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் தீர்ப்புகள் மற்றும் மலல்கொட விசாரணைக்குழு அறிக்கை என்பன சட்டத் துறையிலும் சமூகத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

குறிப்பாக, அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய சாட்சியங்களும் முந்தைய புலனாய்வு அறிவிப்புகளும் இந்த நீதித்துறை நடவடிக்கைகளில் முதன்மைச் காரணியாக அமைந்தன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட மலல்கொட குழுவின் அறிக்கை, பாஸ்கா தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்பாகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதுடன், பின்னநாட்களில் நிலந்த ஜயவர்தனவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், தாக்குதலுக்கு முந்தைய நாட்களில் இடம்பெற்ற புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான சட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் ஒரு சிக்கலான பின்னணியை வெளிப்படுத்துகின்றன.

தாக்குதலுக்கு முந்தைய 5 நாட்கள்: காத்தான்குடி வெடிப்பும் புலனாய்வு அறிவிப்புகளும்

2019 ஏப்ரல் 16 ஆம் திகதி இரவன்று காத்தான்குடி, தாலங்குடா பகுதியில் உள்ள ஒரு காணியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவம் குறித்து அரச புலனாய்வுச் சேவை உடனடியாக விசாரணைகளைத் தொடங்கியது.

இந்த வெடிப்புச் சம்பவமானது சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரால் நடத்தப்பட்ட ஒரு முன்னோடிப் பயிற்சி (dry run) என்பதை அடையாளங்கண்ட அரச புலனாய்வுச் சேவை, ஏப்ரல் 18 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்து, நாடு முழுவதிலுள்ள பொலிஸ் நிலையங்களை விழிப்புணர்வுடன் வைக்குமாறு கோரியது.

தவிர, இவ்விசாரணை காத்தான்குடி பொலிஸாரால் மட்டும் செய்ய முடியாதளவு சிக்கலானது என்பதால், இதனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு ஏப்ரல் 19 ஆம் திகதி புலனாய்வுப் பிரதானி பொலிஸ் மா அதிபரிடம் கோரினார்.

ஏப்ரல் 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கைகள், தாக்குதல் நடந்த பின்னரே (அதாவது ஏப்ரல் 21 அன்று) பொலிஸ் மா அதிபரால் "மேலதிக அறிக்கையை மே 05 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்" என்ற குறிப்புடன் மீண்டும் அரச புலனாய்வுச் சேவைக்கே திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை மலல்கொட குழுவின் அவதானிப்பிற்கு உள்ளானது.

ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 4:12 மணிக்குக் கிடைத்த தகவலின்படி, சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் ஏப்ரல் 21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் இந்தியத் தூதரகம் உட்பட 8 இடங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. இத்தகவல் தொலைபேசி அழைப்புகள், SMS மற்றும் WhatsApp ஊடாகப் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், CID மற்றும் STF பிரதானிகளுக்கு அன்றைய தினம் பிற்பகலிலேயே அறிவிக்கப்பட்டதாகப் புலனாய்வுச் சேவை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலல்கொட குழு அறிக்கை மற்றும் உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புகள்

பாஸ்கா தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட விசாரணைச் சபையின் (மலல்கொட குழு) நிறைவேற்றுச் சுருக்கத்தின்படி, 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்குள் ஐ.எஸ். (ISIS) சித்தாந்தம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் வளர்ச்சி அடைவது குறித்து அரச புலனாய்வுச் சேவையினால் 170 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் பாதுகாப்புச் செயலாளர், தேசிய புலனாய்வுப் பிரதானி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஏப்ரல் 09 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஏப்ரல் 04 ஆம் திகதி கிடைத்த முன்-புலனாய்வுத் தகவல் குறித்து முப்படைத் தளபதிகளுக்கோ அல்லது பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிக்கோ தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படாமை குழுவின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.

அத்துடன், பொலிஸ் மா அதிபர் அத்தகவலை நான்கு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வரம்பிற்குட்படுத்தி பகிர்ந்தளித்தமையால், கிழக்கு உட்பட 8 மாகாணங்களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினர் தகவல்களை அறிய முடியாமல் போனது மிகப்பெரிய குறையாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பிடம் இருந்து அரச புலனாய்வுச் சேவைக்குக் கிடைத்த தகவல் பாதுகாப்பு அமைச்சுக்குக் கிடைத்த போதிலும், அது முறையான முறையில் கீழ்நிலை அதிகாரிகளுக்கும் கள மட்டத்திற்கும் கடத்தப்படாமையே தாக்குதலைத் தடுப்பதற்கான வாய்ப்பு நழுவிப்போனமைக்கு முக்கிய காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பின்னணியும் நீதிமன்றத் தீர்ப்புகளும்

நீதிமன்றத்தின் முன் நடைபெற்ற நீண்ட வழக்கு விசாரணைகளில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை நீதிபதிகளின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதிகாரிகளின் கடமை தவறுகை மற்றும் புலனாய்வுத் தகவல்கள் குறித்த அலட்சியப் போக்கு தொடர்பில் சட்டப் பொறுப்புக்கூறல் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வழக்குத் தீர்ப்புகளில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன வழங்கிய சாட்சியங்களும் ஆவணச் சான்றுகளும் பிரதான அடிப்படையாக அமைந்தன. அதேநேரம், தேசிய பாதுகாப்பு அமைப்பில் காணப்பட்ட கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை என்பனவும் இங்குத் தெளிவாக வெளிப்பட்டன.

புலனாய்வு அமைப்புகளுக்கு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் சட்டபூர்வமான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும், தகவல்கள் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்படக்கூடிய நிலையான செயல்பாட்டு முறைமையை (SOP) தயாரிப்பதற்குமான அவசியத்தையும் இச்சம்பவங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2019 ஏப்ரல் 21 தாக்குதல் பற்றிய விசேட விசாரணைச் சபை அறிக்கை: நிறைவேற்றுச் சுருக்கம்

1. 2015 முதல் கிடைத்த புலனாய்வுத் தகவல்களும் பொறுப்பானவர்களின் இயலாமையும்

விசாரணைச் சபையின் முன் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, இலங்கைக்குள் ஐ.எஸ். குழுக்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து அரச புலனாய்வுச் சேவையினால் 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புச் செயலாளர், தேசிய புலனாய்வுப் பிரதானி மற்றும் பொலிஸ் மா அதிபருக்குப் புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வாராந்த புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும், சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட போதிலும், எவ்வித திட்டமிட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாரம்பரிய இஸ்லாமியக் கருத்துக்களுக்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதில் பொறுப்பானவர்கள் தவறிவிட்டதாக விசாரணைச் சபை அவதானித்துள்ளது. இருப்பினும், பொலிஸ் அதிகாரியோ அல்லது தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான எந்தவொரு நபரோ, இன மற்றும் மத நல்லிணக்கத்தை மட்டுமே கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பு அபாயத்திற்குள்ளாகும் போது அதைப் புறக்கணிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை.

2. ஏப்ரல் 04 ஆம் திகதி கிடைத்த முன்-புலனாய்வு அறிவிப்பு

அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சாட்சியமளிக்கையில்: 2019 ஏப்ரல் 09 ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரதானியால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட புலனாய்வு அபாயம் பற்றிய குறிப்பைக் குறிப்பிட்டு, 2019 ஏப்ரல் 04 ஆம் திகதி இஸ்லாமிய தீவிரவாதக் குழுவொன்றினால் நடத்தப்படக்கூடிய தாக்குதல் திட்டம் குறித்து வாய்மொழித் தகவல் கிடைத்ததாகவும், மறுநாள் வெளிநாட்டுத் தரப்பொன்றினால் அது எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவரது 2019 ஏப்ரல் 07 திகதியிட்ட கடிதத்தின் மூலம் இத்தகவல்கள் தேசிய புலனாய்வுப் பிரதானிக்கு அனுப்பப்பட்டதுடன், பாதுகாப்புச் செயலாளருக்கும் வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 09 ஆம் திகதியளவில் கிடைத்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, தான் ஏற்கனவே முன்னெடுத்து வரும் மாவநல்லைத் தாக்குதல் மற்றும் வனத்தவில்லுவ முகாம் பற்றிய விசாரணைகளுக்கு இது முக்கியமானது என்பதால், தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களின் முழுமையான அறிக்கையைத் தயாரித்து பொலிஸ் மா அதிபருக்கும், அதன் பிரதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் சமர்ப்பித்துள்ளார்.

3. பொலிஸ் மா அதிபரின் செயற்பாடும் தகவல்களை முடக்கியமையும்

2019 ஏப்ரல் 09 ஆம் திகதி இப்புலனாய்வுத் தகவல் கிடைத்ததும், "பொருத்தமான நடவடிக்கைக்காக" என்ற குறிப்புடன் அதனைப் பின்வரும் நான்கு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மட்டுமே பகிர்ந்தளிக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்:

  • மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

  • குற்றவியல் மற்றும் விசேட அதிரடிப்படைச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

  • விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்

  • பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர்

இத்தகவலைத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அதிகாரிகளுக்கு மட்டுமே பொலிஸ் மா அதிபர் சுருக்கியமையால், கிழக்கு உட்பட 8 மாகாணங்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான 8 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், NTJ அமைப்பு மற்றும் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பான விசாரணைகளை நடத்தும் CID சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுப் பிரதானிகள் ஆகியோர் தகவல்களைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

4. காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்பும் சஹ்ரானின் ஒத்திகையும்

2019 ஏப்ரல் 17 ஆம் திகதி மொஹமட் முஸ்தபா ஹசநூன் ஃபஸ்ரி என்பவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து, தனது காணியில் 16 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி வெடித்துள்ளதாகப் முறைப்பாடு செய்தார். பொலிஸார் அந்த 43 ஏக்கர் திறந்தவெளிக் காணியைச் சோதனையிட்டனர்.

அன்றைய தினமே இத்தகவலை அறிந்த அரச புலனாய்வுச் சேவையும் அப் பகுதியைச் சோதனையிட்டது. இரும்புக் துகள்கள் பயன்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டே வெடித்துள்ளதாகவும், இது ஒரு குழுவினால் நடத்தப்பட்ட சோதனை வெடிப்பு (dry run) என்றும், எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தவே இது செய்யப்பட்டுள்ளது என்றும் சந்தேகிக்கப்பட்டது.

ஏப்ரல் 18 ஆம் திகதி புலனாய்வுப் பணிப்பாளர் இது தொடர்பான தகவல்களையும், 2018 டிசம்பரில் மாவநல்லையில் நடந்த சம்பவம் மற்றும் வனத்தவில்லுவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் பற்றிய தகவல்களையும் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கினார். மேலும் ஏப்ரல் 19, 20 திகதிகளிலும் இரு அறிக்கைகள் வழங்கப்பட்டன.

ஏப்ரல் 20 ஆம் திகதி கிடைத்த விசேட தகவலின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், புலனாய்வுப் பிரதானி மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகிய அனைத்து அதிகாரிகளும் தீவிரமாகத் தவறிவிட்டனர்.

விசேட விசாரணைச் சபையின் பரிந்துரைகள்:

5. சட்டப்படியான புலனாய்வுக் கட்டமைப்பின் அவசியம்: வெளிநாட்டிலிருந்து கிடைத்த தகவல் பாதுகாப்பு அமைச்சுக்குக் கைமாற்றப்பட்ட போதிலும், அதற்கு மேல் அது முறையாகக் கடத்தப்படாமையே தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனமைக்குக் முக்கிய காரணம். தற்போதுள்ள புலனாய்வு அமைப்புகள் சட்டபூர்வ சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அவை அமைச்சரவை முடிவுகள் அல்லது பாதுகாப்பு அமைச்சின் முடிவுகளிலேயே இயங்குகின்றன. இதனால் அதிகாரிகளுக்குச் சட்டப் பாதுகாப்பும் இல்லை; சாட்சியமளிக்கும் போது அடையாளமும் வெளிப்படுகிறது. எனவே, நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் அரச புலனாய்வுச் சேவை நிறுவப்பட வேண்டும்.

6. உயர் பதவிகளின் பொறுப்புக்கூறல் மற்றும் பொலிஸ் நிர்வாகக் குறைபாடுகள்: முன்கூட்டியே தகவல் கிடைத்த போதிலும், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபரின் அலட்சியப் போக்கே அசம்பாவிதத்தைத் தடுக்க முடியாமல் போனதற்குக் காரணம். எனவே, இப்பதவிகளுக்குத் தகுதியான, முதிர்ச்சியடைந்த அதிகாரிகளையே நியமிக்க வேண்டும். அத்துடன் தகவல் கிடைத்த பின் பொலிஸ் அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான தெளிவான சுற்றறிக்கைகளோ, நிலையான நடைமுறைகளோ (SOP) பொலிஸ் அமைப்பில் இல்லை.

7. புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் பலவீனம்: 2019 ஏப்ரல் 09 அன்று பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஏப்ரல் 04 கிடைத்த தகவல் குறித்து முப்படைத் தளபதிகளுக்கோ அல்லது பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிக்கோ தெரிவிக்கப்படவில்லை.

8. தேசிய பாதுகாப்புப் புறக்கணிப்பும் தீவிரவாத வளர்ச்சியும்: 2015 இல் சிரியாவில் இலங்கையர் ஒருவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்தமை, 2017 இல் மற்றொருவர் உயிரிழந்தமை மற்றும் 34 இலங்கையர்கள் சிரியா சென்றமை குறித்துப் புலனாய்வுத் துறை தொடர்ந்து எச்சரித்தது. 2018 டிசம்பரில் மாவநல்லை, கண்டி, ரம்புக்கன பகுதிகளில் புத்தர் மற்றும் கத்தோலிக்க, இந்து சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

9. மாவநல்லை, வனத்தவில்லுவ மற்றும் NTJ அமைப்பைத் தடை செய்யாமை: 2019 ஜனவரி 16 இல் வனத்தவில்லுவில் வெடிபொருட்கள் மற்றும் முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கும் மாவநல்லைச் சம்பவத்திற்கும், சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பிற்கும் தொடர்பிருப்பது உறுதியானது. அப்போதே NTJ அமைப்பைத் தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கத் தவறியமையே, சஹ்ரான் குழுவினர் ஏப்ரல் 21 தாக்குதலைத் தடைகளின்றித் திட்டமிட்டு நடத்தக் காரணமாக அமைந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...