உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் தற்போதைய வரிவிதிப்புக் கொள்கைகள் போன்ற காரணிகளால், இலங்கையின் பிரதான அந்நியச் செலாவணி ஈட்டும் துறையான தேயிலைக் கைத்தொழில், கடந்த ஒரு தசாப்த காலத்தில் சந்தித்திராத மிக மோசமான வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
இவ்வருடத்திற்கான வருடாந்த உற்பத்தி இலக்கை 290 - 300 மில்லியன் கிலோகிராம் வரை பேணுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் முயன்ற போதிலும், 2026ஆம் ஆண்டின் முதற்பாதியின் தரவுகள் ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியிலும் ஏற்பட்டுள்ள கடுமையான முடக்கத்தைக் காட்டுகின்றன.
புள்ளிவிபரங்களும் மத்திய கிழக்கு சந்தை அதிர்ச்சியும்
ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் (EDB) உத்தியோகபூர்வ தரவுகளின்படி, முதலாம் காலாண்டில் தேசிய தேயிலை உற்பத்தியானது 59.61 மில்லியன் கிலோகிராம் வரை, அதாவது 2.55 மில்லியன் கிலோகிரா மாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதி அளவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2.85 மில்லியன் கிலோகிராம் பின்னடைவைக் காட்டியுள்ளது.
-
யுத்தச் சூழ்நிலை: மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள யுத்தப் பதற்றம் காரணமாக கடல்சார் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் (Marine Insurance Premiums) கணிசமாக உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, இலங்கைத் தேயிலையின் மிகப்பெரிய கொள்வனவாளராக விளங்கிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) ஏற்றுமதி 93% என்ற அதிர்ச்சிகரமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் ஈராக்கிற்கான ஏற்றுமதியும் 38% இனால் குறைவடைந்துள்ளது.
-
விலை வீழ்ச்சி: சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொய்வு காரணமாக, கொழும்பு தேயிலை ஏலவிற்பனையில் தேசிய சராசரி விலை ஒரு கிலோகிராமுக்கு சுமார் 26 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சில தேயிலை வகைகளின் விலைகள் 20% வரையில் சரிவைக் கண்டுள்ளன.
உள்நாட்டுச் செலவுகள் மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகளின் அச்சுறுத்தல்
ஏற்றுமதியாளர்கள் சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் அதேவேளை, உள்நாட்டில் செயல்பாட்டுச் செலவுகள் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன.
-
உற்பத்திச் செலவு: உள்நாட்டு எரிபொருள் விலைகள் 30% இனால் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து, தொழிற்சாலை செயல்பாடுகள் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கான செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
-
SVAT செயற்திட்டம்: எளிமையாக்கப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (SVAT) முறையை ரத்து செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஏற்றுமதியாளர்கள் தங்களின் அன்றாட நிதிப்புழக்கத்தைப் பேணுவதற்காக வணிக வங்கிகளிலிருந்து அதிக வட்டி வீதத்தில் கடன் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனத் தேயிலை சபை பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
-
இரட்டை வரிவிதிப்பு: பல்வேறு நாடுகளின் மூலங்களைக் கொண்ட கலப்புத் தயாரிப்புகளுக்காக (Multi-origin blending) இறக்குமதி செய்யப்படும் CTC மற்றும் பச்சைத் தேயிலை (Green Tea) மீதான இரட்டை வரிவிதிப்பு காரணமாக, சர்வதேச சந்தையில் ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் திறனை இலங்கை இழந்து வருகின்றது. அத்துடன், வட மற்றும் தென்னமெரிக்காவின் வளர்ந்து வரும் சந்தைகளுக்குள் நுழைவதற்கான ஒழுங்குமுறை வழிமுறைகளும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.
பெருந்தோட்ட நிறுவனங்களின் புதிய மூலோபாய மாற்றம்
பாரம்பரிய மத்திய கிழக்கு சந்தைகள் சுருங்கி வருவதைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது வர்த்தக மாதிரியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
-
மொத்த ஏற்றுமதிக்கு மாற்றாக 'பிராண்டட்': ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம் (Hayleys Plantations) மற்றும் பிரவுன்ஸ் பெருந்தோட்ட நிறுவனம் (Browns Plantations) ஆகியவற்றின் கீழ் உள்ள கம்பனிகள், லாபம் குறைந்த மொத்தத் தேயிலை (Bulk Tea) ஏற்றுமதிக்கு பதிலாக, அதிக மதிப்பு கூட்டப்பட்ட முத்திரையிடப்பட்ட நுகர்வோர் தயாரிப்புகளை (Value-added Branded Products) சந்தைக்கு அறிமுகப்படுத்துவதை வேகப்படுத்தியுள்ளன.
-
சந்தை விற்றுவகைப்படுத்தல்: மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாற்பட்டு புதிய ஏற்றுமதி இலக்குகளைக் கண்டறிவதற்காக, சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பதை இந்நிவனங்கள் அதிகரித்துள்ளன.
எவ்வாறாயினும், வெறும் சந்தைப்படுத்தல் (Marketing) உத்திகள் மூலம் மட்டும் குறைந்து வரும் உற்பத்தியையும் அதிகரித்து வரும் செலவீனங்களையும் ஈடுகட்ட முடியாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கம் உடனடியாக வரித் தளர்வுகளை வழங்கி, ஒழுங்குமுறை கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, போக்குவரத்துத் தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இலங்கைக்குரிய உலகளாவிய தேயிலைச் சந்தைப் பங்கினை கென்யா போன்ற போட்டியாள நாடுகள் கைப்பற்றுவதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


