-
காணாமலாக்கப்பட்டோரின் நிலை வெளிப்படுத்தப்படாத வரை குற்றங்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை.
-
நீதி கிடைக்காமலேயே 400 க்கும் மேற்பட்ட பெற்றோர் உயிரிழப்பு.
-
காணாமற்போனோர் பற்றிய பதிவாளர் அலுவலகம் (OMP) குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கு மாற்றாகாது எனப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றச்சாட்டு; 8 ஆண்டுகளில் 31 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலேயே எந்தவொரு தாயும் உயிரிழக்கக் கூடாது என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஒருவர் வடக்கில் வலியுறுத்தியுள்ளார்.
2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து, தமது கணவர்கள், மகள்கள், மகன்கள் மற்றும் உறவினர்களைத் தேடி 2017 ஆம் ஆண்டு போராட்டம் தொடங்கிய தமிழ் பெற்றோர்களில் குறைந்தபட்சம் 400 பேராவது இதுவரை நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளதாக பிராந்திய மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் நிலையை அறியாமல் உறவினர்கள் பதில்களைத் தேடும் வரை, காணாமலாக்கல் எனும் குற்றம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருப்பதாக வலிந்து அல்லது விருப்பத்திற்கு மாறாகக் காணாமலாக்கப்படுதல் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோரினா டெல்காடிலோ (Ana Lorena Delgadillo) சுட்டிக்காட்டியுள்ளார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் வட கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பும்
நாட்டில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் போக்கு நீடிப்பது குறித்து அவர் தனது கடும் கவலையை வெளிப்படுத்தினார்:
"தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் போக்கு உயர் மட்டத்தில் காணப்படுவது கவலையளிக்கிறது. சமூகத்தின் மீது இத்தகைய போக்கு திணிக்கப்படும் போது, வலிந்து காணாமலாக்கப்படுவதற்கு அனுமதி உள்ளது என்ற செய்தியையே அதிகாரிகள் வழங்குகின்றனர். இதனாலேயே நாங்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் போக்கு குறித்து தீவிர கவனம் செலுத்துகிறோம்."
இதேவேளை, உண்மையைக் கண்டறிவதற்கும் நீதி மற்றும் இழப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கும் தற்போதைய அரசாங்கம் பழைய நடைமுறைகளிலிருந்து விடுபட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) ஆசிய பிராந்திய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் (Smriti Singh) வலியுறுத்தியுள்ளார்.
நம்பகமான சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கும், சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச அளவிலான குற்றங்கள் தொடர்பில் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்திப் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் சர்வதேச சமூகத்திற்குப் பொறுப்பு உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
வெள்ளை வேன் முன்செல்ல நீதிக்கான பேரணி
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுசரிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1974 ஆம் ஆண்டு நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் இடம்பெற்ற பொலிஸ் தாக்குதலில் உயிரிழந்த ஒன்பது பேரின் நினைவாக இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின்னர், காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களின் ஒளிப்படங்களால் மூடப்பட்ட 'வெள்ளை வேன்' ஒன்றை முன்னிறுத்திப் பேரணியாகப் புறப்பட்ட மக்கள் தந்தை செல்வா அரங்கை வந்தடைந்தனர்.

"OMP குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கு மாற்றாகாது"
காணாமற்போனோர் பற்றிய பதிவாளர் அலுவலகத்திற்கு (OMP) தங்களது எதிர்ப்பை வெளியிடுவதற்கான காரணத்தை வட கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சனி விளக்கமளித்தார்:
"எமது உறவினர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை யார் அழைத்துச் சென்றது? எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்? எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்களின் இறப்பிற்கு யார் பொறுப்பேற்பது? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஒரு வழக்கை முடித்து வைப்பது நீதியாகாது. OMP ஒரு முக்கியமான நிறுவனமாக இருக்கலாம், ஆனால் அது குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான மாற்று நிறுவனமாக இருக்க முடியாது."
உண்மையான நீதி கிடைக்க வேண்டுமெனில் சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் இராணுவ ஆவணங்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
8 ஆண்டுகளில் 31 பேர் மட்டுமே கண்டறியப்பட்டமை மற்றும் பொலிஸ் இடையூறு
கடந்த 8 ஆண்டுகளில் 22,000 க்கும் மேற்பட்ட காணாமலாக்கல் முறைப்பாடுகளை ஆய்வு செய்து 'உயிருடன் இருக்கும்' 31 பேரைக் கண்டறிந்துள்ளதாக OMP தலைவர் சட்டத்தரணி மகேஷ் கத்துலந்த சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் இறுதி வாரத்தில் OMP யாழ்ப்பாணத்தில் நடத்திய நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தாய்மார்கள், உயிருடன் இருப்பதாகக் கூறப்படும் 31 பேரின் விபரங்களைக் கோரிய போது, பொலிஸார் அவர்களுக்கு இடையூறு விளைவித்தமை குறிப்பிடத்தக்கது.





