இடையே நிலவும் சமத்துவமற்ற நடத்தை மற்றும் சில கைதிகளுக்குக் கிடைக்கும் விசேட சலுகைகளுமே மூலக் காரணம் என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு (CPRP) தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சிலர், சிறைச்சாலை அதிகாரிகளின் ஆதரவுடன் விசேட வசதிகளையும் சலுகைகளையும் அனுபவித்து வந்துள்ளதாக அக்குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக்க பெரேரா குறிப்பிட்டார்.
அத்துடன், 991 பேரை மாத்திரம் தடுத்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட மஹர சிறைச்சாலையில் தற்போது 4,447 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் இவ்வாறானதொரு சூழ்நிலை உருவாகக் பிரதான காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எப்படியிருப்பினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்திற்கு இதுவரை உத்தியோகப்பூர்வ அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனச் சிறைச்சாலைகள் ஆணையாளர் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 01ஆம் திகதி பிற்பகல் ஆரம்பமான இந்தப் பதற்ற நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சிறைச்சாலைகள் திணைக்களம், இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் முப்படையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை மேற்கொண்டு, ஆகஸ்ட் 02 ஆம் திகதி அதிகாலையாகும் போது நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவத்தின் போது இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த கைதிகளில் வத்தளை - ஹேந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
கைதிகள் சிறைச்சாலையின் மறுவாழ்வுப் பிரிவு, பார்வையாளர்கள் சந்திப்பு பகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, சமையலறை மற்றும் தொழிற்பிரிவு உள்ளிட்ட பல கட்டிட வளாகங்களுக்குத் தீ வைத்துச் சேதம் விளைவித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் ஏ.சீ. கஜநாயக தெரிவித்தார். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிரதான வாயிலுக்கு அருகில் இருந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், விமானப்படையினரால் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வான்வழியாகவும் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பதற்ற நிலைக்கு நேரடியாகத் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 104 கைதிகளை தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யச் சிறைச்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்சமயம் சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல் சிறைச்சாலையின் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மஹர சிறைச்சாலை அத்தியாட்சகர் ரோஹண களப்பதி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) மூவர் கொண்ட விசாரணைக்குழுவை நியமித்து இச்சம்பவம் குறித்து விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளுக்குப் பின்னரே பார்வையாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பவுள்ளன. அத்துடன், சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் அளவுக்கு அதிகமான நெருக்கடி மற்றும் பாதுகாப்புச் சவால்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.


