-
கன்னியா பிள்ளையார் கோவில் வளாகத்தில் தூபியைப் புனரமைப்பதற்கு எதிராகத் திருகோணமலை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு.
-
தனியார் காணியிலுள்ள தொல்பொருள் இடத்தை உள்ளவாறே பாதுகாக்க முடியுமே தவிர, புதிதாகக் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாது எனச் சட்டத்தரணி சுமந்திரன் வலியுறுத்தல்.
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றிலுள்ள பழமையான சிதைவடைந்த தூபி வளாகத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவு
முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் வளாகத்திலுள்ள பழமையான தூபியை உள்ளவாறே உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக, அதனைப் புனரமைக்கும் பணிகளைத் தடுக்கும் வகையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஏ. அப்துல்லா 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு செப்டம்பர் 22 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிட்டார்.
கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் சேதமடைந்துள்ள பிள்ளையார் கோவில் வளாகத்திலுள்ள பழமையான தூபியைப் புனரமைக்கும் பணிகளுக்காக ஜூலை 22 ஆம் திகதி தொல்பொருளியல் திணைக்களத்தினால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
"தற்போது உள்ள நிலையிலேயே அதனைப் பேணிச் செல்ல வேண்டும். அதாவது எவ்வித கட்டுமானங்களையும் செய்யக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை அந்த உத்தரவு அமுலில் இருக்கும்," எனச் சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
சூழ்நிலையை ஆய்வு செய்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காகத் தொல்பொருளியல் திணைக்களம் சார்பில் ஆஜரான அரசுச் சட்டத்தரணி கால அவகாசம் கோரியதால், நீதிமன்றம் இந்த திகதியை நிர்ணயித்ததாகப் பிரதேச செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிள்ளையார் கோவிலும் அதன் அருகிலுள்ள பழமையான தூபியும் அமைந்திருக்கும் நிலம் பிரதேசவாசி ஒருவருக்குச் சொந்தமான தனியார் காணியாகும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
முந்தைய உடன்பாடும் மனுவும்
தனியார் காணியிலுள்ள பிள்ளையார் கோவிலை வேறொரு இடத்தில் அமைப்பதற்கும், அக்காணியில் காணப்படும் பழமையான தூபியை உள்ளவாறே பாதுகாப்பதற்கும் முன்னர் தொல்பொருளியல் திணைக்களம் நீதிமன்றத்தில் உடன்பட்டிருந்தது.
தொல்பொருள் மதிப்புடையதாக அடையாளங் காணப்பட்ட இடத்தைப் பாதுகாக்கும் உரிமை தொல்பொருளியல் திணைக்களத்திற்கு உள்ளதாகவும், அதற்கமைய அங்கிருந்ததாகக் கூறப்படும் பண்டைய தூபியைத் தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் H.C.R./RIT/590/2019 வழக்கு உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பிற்கு அமைய, காணியின் உரிமையாளர் சட்டத்தரணி பிரசாந்தி உதயகுமார் ஊடாக நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் எட்டப்பட்ட முந்தைய உடன்பாட்டிற்கு மாறாகத் தொல்பொருளியல் திணைக்களம் தமது காணியிலுள்ள பழமையான தூபியைப் புனரமைக்கும் பணிகளைத் தற்போது முன்னெடுத்து வருவதாகத் தெரியப்படுத்தியிருந்தார்.
தொல்பொருட்கள் சட்டத்தின் 20 ஆவது பிரிவு
முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், தனியார் காணியிலுள்ள தொல்பொருள் இடத்தை உள்ளவாறே பாதுகாக்க முடியுமே தவிர, அதில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது எனத் தொல்பொருட்கள் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களையும், முன்னர் தொல்பொருளியல் திணைக்களம் ஏற்றுக்கொண்ட விடயங்களையும் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியதாகக் கூறினார்.
"தொல்பொருட்கள் சட்டத்தின் 20 ஆவது பிரிவில் காணி உரிமையாளருக்கும் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வொப்பந்தத்தில் அங்குள்ள தொல்பொருள் இடத்தைப் பாதுகாப்பது குறித்து மட்டுமே ஒப்பந்தம் செய்ய முடியும். எமது நிலைப்பாடு என்னவென்றால், நீதிமன்றத்தில் பெறப்பட்ட உடன்பாடே அந்த ஒப்பந்தமாகும். தொல்பொருட்கள் சட்டத்தின் 20 ஆவது பிரிவின் கீழ் உள்ள ஒப்பந்தத்தில் விசேடமாக 'பாதுகாப்பு மட்டுமே' என்ற சொல் உள்ளது. அதாவது வேறு எதுவும் செய்யக் கூடாது. பாதுகாப்பதை மட்டுமே செய்ய முடியும்; புனரமைக்க முடியாது; மறுசீரமைக்க முடியாது. சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஏனைய அதிகாரங்களைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், உள்ளவாறே பாதுகாக்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொள்வோம் என அவர்கள் எம்முடன் நீதிமன்றத்தில் உடன்பட்டிருந்தமையாலேயே இதனை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம்."
தூபி இருந்ததாகக் கூறப்படும் இடத்தில் பழமையான கட்டிடத்தின் சிதைவுகள் போன்ற கற்கள் குவிந்து காணப்படுவதுடன், அப்பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



