ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தியும், அதற்கு ஆதரவாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள 60 க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செப்டம்பர் 01) முதல் உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகிறது.
அரசியலமைப்பிற்கு அமைய முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலத்தைச் சவாலுக்கு உட்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் (ஆகஸ்ட் 31) நிறைவடைந்த பின்னணியில், சட்டத்துறை, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல தரப்பினரும் இம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணை
குறித்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நடைபெறவுள்ளது.
இவ்வமர்வின் ஏனைய உறுப்பினர்களாக உயர் நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் பணியாற்றுகின்றனர். இம்மனுக்கள் அனைத்திலும் சட்டமா அதிபர் பதிலவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
சட்ட மூலத்திற்கு எதிரான மனுதாரர்களின் வாதம்
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்பின் அடிப்படை விதிகளை மீறுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்த்தரப்பும் பல சிவில் அமைப்புகளும், இதனை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு சிறப்பு பெரும்பான்மைக்கு மேலதிகமாக மக்கள் தீர்ப்பின் (Referendum) அனுதியைப்பெறுமாறு உத்தரவிடுமாறு கோரி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
எதிராக மனுத்தாக்கல் செய்துள்ள முக்கிய தரப்பினர்:
-
சட்டத்தரணிகள் அமைப்புகள்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, இணைச் செயலாளர் லக்கித வாகிஷ்டஆரச்சி, பொருளாளர் பசிந்து சில்வா, கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம், இளம் சட்டத்தரணிகள் சங்கம், ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பு மற்றும் சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன.
-
அரசியல் தலைவர்கள்: பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், உதய கம்மன்பில, சரத் வீரசேகர, ஹர்ஷன ராஜகருணா, தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி லால் விஜேநாயக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜி. வீரசிங்க, முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ மற்றும் மிலிந்த ராஜபக்ஷ.
-
சிவில் அமைப்புகளும் பிரதிநிதிகளும்: வைத்தியர் சமல் சஞ்சீவ, இலங்கை ஆசிரியர் சங்கம், பிரஜாவளய, தேசிய பிக்கு முன்னணி, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, கலாநிதி அஜந்தா பெரேரா, பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, பேராசிரியர் ரஞ்சன் அபயரத்ன, ஷிரால் லாக்திலக்க, சுனில் ஜயசுந்தர (வினிவித அறக்கட்டளை) மற்றும் ஆனந்த பாலித.
சட்ட மூலத்திற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்
அதேவேளை, முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் சில தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி, வணக்கத்திற்குரிய வகமுல்லே உதித தேரர், சரத் மனமேந்திர, சட்டத்தரணி ஜனக அதிகாரிகே, சட்டத்தரணி பாலித சேனாடீர, சட்டத்தரணி புத்திக விஜேசூரிய, ஜாமுனி சமந்த துஷார, சுந்தந்த திலகசிரி மற்றும் சரத் லால் ஆகியோர் இதில் அடங்குவர். இச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் நீதித்துறை அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் திறனை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதே இத்தரப்பினரின் பிரதான வாதமாகும்.
எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு
நேற்று (ஆகஸ்ட் 31) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்களின் அடிப்படை உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில், முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தம் மூலம் நீதி வழங்கும் நடைமுறையில் தேவையில்லாத அழுத்தங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொருளாதாரச் சவால்கள் மற்றும் ஜனநாயக இடைவெளி சுருங்குவதைத் தடுப்பதற்காகச் சிவில் சமூகத்துடன் இணைந்து நிற்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாப்பதற்காகக் கட்சி பேதமின்றிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


