விகாரையொன்றுக்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவற்றை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் பொசன் பௌர்ணமி தினத்தன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனுபுத்த மிஹிந்து மகாரஹத்தனின் இலங்கை வருகையை நினைவுகூரும் பொசன் பௌர்ணமி தினமான ஜூன் 29ஆம் திகதி, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு தையிட்டி கிராமத்தில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரையின் நுழைவாயிலுக்கு அருகில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர். இதன்போது, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரைக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரைக்கு அருகில் போராட்டங்களை நடத்தி வரும் தமிழ் மக்கள், தையிட்டி பகுதியில் 14 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான 6 ஏக்கருக்கும் அதிகளவிலான தனியார் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாகப் பறிமுதல் செய்தே இந்த திஸ்ஸ விகாரையை அமைத்துள்ளதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, தையிட்டி கிராமத்தில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளைப் பலவந்தமாக ஆக்கிரமித்து இராணுவத்தின் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த திஸ்ஸ விகாரையானது, இதுவரையில் (புத்தசாசன அமைச்சில்) பதிவு செய்யப்படவில்லை என்பதை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் 2025 செப்டம்பர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இவ்வாறு பதிவு செய்யப்படாத பல திஸ்ஸ விகாரைகள் காணப்படுவதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, கன்கசன்துறை திஸ்ஸ விகாரையானது வரலாற்றுச் சிறப்புமிக்க இடமொன்று எனத் தெரிவிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம், அங்கு புனரமைக்கப்பட்ட சைத்தியத்தின் (தூபி) கொத்தணி நடும் புண்ணியோற்சவம் 2023 ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெற்றதாகத் தமது உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கிறிஸ்துவுக்கு முன் (கி.மு) 3ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்த விகாரையானது, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இராணுவத்தின் பங்களிப்புடன் கன்கசன்துறை தையிட்டி பகுதியில் 'ராஜமகா விகாரை' என்ற நாமகரணப் பலகைகளைத் தாங்கி அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையானது ஒரு போலியானது என நாகதீப புராண ராஜமகா விகாரையின் விகாராதிபதியும், வட இலங்கைக்கான பிரதம சங்கநாயக்கருமான நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரர் கடந்த ஆண்டு பகிரங்கப்படுத்தியிருந்தார்.
அதேபோன்று, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கான அமரபுர ஸ்ரீ கல்யாணிவங்ச நிகாயவின் வட இலங்கைக்கான உப பிரதம சங்கநாயக்கர் பதவிப் பிரமாணப் பத்திரம் மற்றும் விசிறி வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
பௌத்த விவகார அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய வண. பலபிட்டியே சிறி சீவலி தேரர், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியில் தமிழ் மக்கள் உரிமை கோரும் காணிகளை அவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதே விகாராதிபதிக்குச் செய்யும் உண்மையான கௌரவமாகும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



