இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக தெரிய வருகின்றது.பதுளை லுணுகல பகுதியிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

மொனராகலை - பதுளை பிரதான வீதியின் பசறை - 13ம் கட்டை பகுதியிலேயே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்தபோது பஸ்ஸில் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

13ம் கட்டை பகுதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்ட பிரதான வீதியில் பாரிய கற்கள் வீழ்ந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த பகுதியில் ஒரு வாகனம் மாத்திரமே பயணிக்கக்கூடிய நிலையில், லொரி ஒன்றுக்கு இடமளிக்க முயற்சித்த போது பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த உடனே 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் சிலர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் கூறுகின்றனர்.

இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தோரில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

பதுளை மாவட்டத்தின் பண்டாரவளை - பூனாகலை பகுதியில் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நடந்த மற்றொரு பஸ் விபத்தில் 10 பேர் இறந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது பூனாகலை நோக்கி பயணித்த பஸ் சுமார் 350 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி