அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கைவிடுத்துள்ள அவர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர அவரது உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி என ஜெயலலிதா அடையாளம் காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

அரசியலைவிட்டு ஒதுங்குவதாக ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா திடீர் அறிவிப்பு. ஜெயலலிதாவின் ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டுமெனவும் கோரிக்கை.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்கோ, பட்டத்திற்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.

டிடிவி தினகரன் துவங்கிய அ.ம.மு.க. அதி.மு.கவுடன் இணையுமா என பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சசிகலாவின் அறிக்கை வெளியான பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக வி.கே. சசிகலா ஒதுங்கியருப்பதாகத் தெரிவித்தார்.

"துவக்கத்திலிருந்தே பதவியேற்பதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தொடர்ந்து வலியுறுத்தியதால் பிறகு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது. அப்போதுதான், தற்போதைய முதல்வரைத் தேர்வுசெய்து ஆட்சி செய்ய அனுமதித்தார். சிறையிலிருந்து வெளிவரும்போதுகூட அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னாரே என்று நீங்கள் கேட்கலாம். அப்படிச் சொன்னாலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்திருக்கலாம். ஆனால், ஒரு மாதமான நிலையிலும் ஏதும் நடக்கவில்லை. ஆகவே நான் ஒதுங்கியிருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாவீர்கள் என சொல்லி இப்போது ஒதுங்கியிருக்கிறார்" என்றார் தினகரன்.

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என்று தொடர்ந்த வழக்கைப் பொறுத்தவரை, அவர் அரசியலை விட்டே விலகுவதாகச் சொல்லிவிட்ட நிலையில் எல்லாவித உரிமைகோரல்களையும் விட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்தார் தினகரன்.

"அ.தி.மு.கவின் தன்னைச் சேர்ப்பேன், சேர்க்க மாட்டேன் என பலரும் பேசுவதால், தான் பேசு பொருளாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் விலகியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். எங்களைக் கட்சியைவிட்டு விலக்கிவிட்டதால்தான் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். சசிகலாவை மையமாக வைத்து கட்சியை மீட்போம் என ஒருபோதும் சொல்லவில்லை. சசிகலா சிறையிலிருக்கும்போது கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டோம். ஆகவே அவரை மையமாக வைத்து செயல்பட்டதாகச் சொல்ல முடியாது."

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இனி என்ன ஆகுமெனக் கேட்டபோது, சசிகலாவின் அறிவிப்பிற்கும் அ.ம.மு.கவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றார் தினகரன்.

அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய உதவுவோம் என சசிகலா சொல்லியிருக்கும் நிலையில், அது அ.தி.மு.க. வடிவில் அமையுமா அல்லது அ.ம.மு.க. வடிவில் அமையுமா எனக் கேட்டபோது, அ.ம.மு.க. தலைமையில்தான் அமையும் என்றார். ஆனால், அவரை தன் கட்சியில் சேரும்படி தான் வலியுறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

"இந்த அறிவிப்பு அ.ம.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் சோர்வை ஏற்படுத்தும். நானே சோர்வடைந்திருக்கிறேன். இம்மாதிரி அவர் நினைக்கிறார் என்று தெரிந்தவுடன் நேரில் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் பேசிப்பார்த்தேன். பிறகு மாலை வந்தபோது, தான் எழுதி வைத்திருந்த அறிக்கையைக் காண்பித்தார். ஏன் ஒதுங்குகிறீர்கள் என்று கேட்டேன். அவர் இதுதான் சரியான முடிவு என்றார். பிறகு என்ன செய்ய முடியும்? அவர் மனதில் பட்டதைத் தெரிவித்திருக்கிறார். இதற்குப் பிறகு அ.ம.மு.க. நிர்வாகிகளை அழைத்துப் பேசி என்ன செய்வதென முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் எங்களை தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். 1,300 பேர் வரை விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். பத்தாம் தேதிவரை விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம். பத்தாம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம். கூட்டணி முடிவானதும் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்" என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி