1200 x 80 DMirror

 
 

'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் பேர் வாங்கிய கூத்துக்கலைஞர் தங்கராசுவை இப்போதும் எவரும் மறந்து விடவில்லை. முதல் படத்திலேயே தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தபோதிலும் "வறுமை" அவரை விட்டு நீங்கவில்லை.

மார்க்கெட்டில் வெள்ளரி வியாபாரம் பார்த்து குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் அதுவும் முடங்கிப்போக, ரேஷன் அரிசிதான் தங்கராசுவின் குடும்பத்தை காப்பாற்றியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் பெய்த கணமழையால் அவரின் வீடும் இடிந்துவிழுந்ததால் நிலைகுழைந்தது வாழ்வாதாரம். என்ன செய்வதென வழி தெரியாமல் நின்றவருக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வீடு கட்டித் தர முன்வந்துள்ள சம்பவம் திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டைக்கு அருகேயுள்ள இளங்கோ நகர் பகுதியில் வாழ்ந்து வரும் தங்கராசுவை பிபிசிக்காக நேரில் சென்று சந்தித்தோம். வீட்டு வாசலில் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த தங்கராசுவின் மனைவி பேச்சிக்கனி நம்மை வரவேற்றார். "அவுக கொல்லைக்கு கால் நனைக்கப் போயிருக்காவ. இந்த திண்ணையில உக்காருங்க சாமி. செத்த நேரத்துல வந்துருவாவ" என்றவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தோம்.

"எங்க நெலமய பாத்தியளா சாமி. எப்புடி வாழ்ந்த சனங்க தெரியுமா நாங்க. எங்க மாமனாரு மிலிட்டரிகாரவுக. நல்லா வாழ்ந்த குடும்பம். நான் அவுகளுக்கு அத்த மவதேன். நாமதேன் கஷ்டப்படுறோம். நம்ம புள்ளயாச்சும் நல்லா வாழுவான்னு சொல்லி சொந்தத்துக்குள்ளேயே கட்டி வெச்சிட்டாக. கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள்லயே எனக்கு சொவமில்லாம போயிடுச்சு. படுத்த படுக்கையா மூச்சு விட முடியாம நெஞ்சப்புடிச்சிக்கிட்டு சாவக்கெடந்தேன். சொந்தக்காரவுக எல்லாரும் 'இவ இதுக்கு மேல எங்க பொழைக்கப் போறா. தங்கராசுக்கு சட்டு புட்டுன்னு வேற கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்'னு முடிவு பண்ணினாக. ஆனா, என் வீட்டாளு அதுக்கு சம்மதிக்கல. எம்பொண்டாட்டிய நான் எப்பாடு பட்டாவது காப்பாத்துவேன்னு சொல்லி பெரிய பெரிய டாக்டர்மார்ட்ட கூட்டிட்டு போயி நெறைய செலவு பண்ணி காப்பாத்துனாவ. அதுக்கப்பறம் ஒரு வருசத்துல பொம்பளப்புள்ள பொறந்துச்சு. எனக்கு சொவமில்லாத காரணத்தால அவருதான் புள்ளையையும் கவனிச்சிக்கிட்டு வீட்டு வேலையையும் பாக்க ஆரம்பிச்சாவ. நான் என்னால முடிஞ்ச வேலைய மட்டும்தான் பாப்பேன். காலையில வயல் வேலைக்குப் போனா ராவுல வேஷங்கட்டி கோவில்களுக்கு ஆடப்போயிடும்.

அப்புடி கோயில் கொடைல இவுக ஆட்டத்த பாத்துட்டுத்தான் மாரி செல்வராஜ் தம்பி அவரோட படத்துல நடிக்க வைக்க வீடு தேடி வந்துச்சு. மொதல்ல நான்கூட யாரோ கடன்காரங்கதான் தேடி வாராகளோன்னு நெனச்சேன். அதுக்கப்பறமாதான் விஷயம் புரிஞ்சது. இவுக எவ்வளவோ மறுத்தும் அந்தத் தம்பி, 'நீங்கதான் நடிக்கணும்'னு சொல்லி கூட்டிட்டுப் போச்சு. அந்தத் தம்பியோட படத்துல நடிச்சதுக்கு அப்பறமாதான் எங்களுக்கு பேரும் புகழும் கிடைச்சுது" என்கிறார் பேச்சிக்கனி.

பரியேறும் பெருமாள் தங்கராசு

பேச்சிக்கனி இப்போது வரையிலும் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தை பார்க்கவில்லை. படம் வெளியான பிறகு பலமுறை வாய்ப்பு கிடைத்தும் அவர் படத்தைப் பார்க்க மறுத்துவிட்டாராம். இனியும் நான் அந்தப் படத்தைப் பார்க்கப்போவதில்லை என்கிறார்.

"இவுக நடிச்ச படம் தியேட்டர்ல வந்துருக்குறதா சொல்லி அக்கம் பக்கத்துல உள்ளவுகலாம் போய் பாத்துட்டு வந்துட்டு என்கிட்ட, 'இந்தா பேச்சிக்கனி நீ இந்தப் படத்தப் பாக்க வேணாம். உம் புருசன் துணியே இல்லாம ரோட்டுல ஓடுவாரு. அதனால, நீயெல்லாம் போய் பாத்தா உன்னால தாங்க முடியாது' ன்னு சொல்லிட்டாவ. எம் மவளும் படத்தப் பத்தி கேள்விப்பட்டு நாம பாக்க வேணாம்மான்னு சொல்லிட்டா. அவளும் இப்போ வர படத்த பாக்கவே இல்ல. டிவியில கூட போட்டதா சொன்னாக. என் வீட்டுல கரன்ட்டும் கிடையாது. டிவியும் கிடையாது. அதனால, பாக்காமலேயே இருந்துட்டோம். என் வீட்டாளு அந்தப் படத்துல எப்புடி நடிச்சிருக்காவன்னுலாம் தெரியாது. எல்லாருமே பாராட்டத்தான் செய்யுதாக. ஆனா, எந்த பொண்டாட்டிக்குத்தான் தன்னோட புருசன் அம்மணமா ஓடுறத பாக்குற தைரியம் வரும். அதான் சாமி நான் பாக்கல" என அவர் சொல்லிக்கொண்டிருக்க, "வாருமய்யா, வாரும்" என குரல் கொடுத்தபடியே தங்கராசு வந்தார்.

"ஏலா, வந்தவுகிட்ட சும்மா என்னத்த பேசிக்கிட்டு கெடக்க. மொதல்ல புள்ளைங்க குடிக்க மோரு, தண்ணி எதாச்சும் கொண்டு வா" என்றபடியே நம்மிடம் பேசத்தொடங்கினார்.

"என்னோட 17 வயசுல நான் வேஷங்கட்டி ஆடத்தொடங்கினேன். இந்தத் தொழில யாரும் எனக்கு சொல்லியெல்லாம் தரல. நானே மனக்கற்பனையில இப்படித்தான் ஆடணும், இப்படித்தான் பாடணும்னு பயிற்சி எடுத்து ஆட ஆரம்பிச்சேன். தொழிலுக்குப் போற இடத்துல ஆரம்பத்துல எல்லாரும் என்ன இந்த ஆளு இப்புடி இருக்காரே. இவரு நல்லா ஆடுவாரான்னு பேசிக்குவாங்க. ஆனா, நான் வேஷங்கட்டி ஆட்டத்துக்கு ரெடியானதும் சனங்கள்லாம் வாயடைச்சு்ப் போயிடுவாங்க. ஆட்டம் முடிஞ்சதும் என்கிட்ட வந்து, 'என்னய்யா நாங்க என்னமோ நெனச்சோம். ஆனா, ஒம்ம ஆட்டம் பிரமாதமா இருந்ததேய்யா'னு பாராட்டுவாங்க. பகல் முழுக்க வெள்ளரி வியாபாரம் பாப்பேன். ராவுல கூத்துக்கட்ட போயிடுவேன். இப்ப ஆட்டத்துக்குப் போறத நிறுத்தி வருஷம் 12 ஆகிடுச்சு. வெள்ளரி வியாபாரம் மட்டும் பாத்துட்டு வந்தேன்.

படம் வெளியானதும் சென்னைக்கு கூட்டிட்டுப் போயி ஒரு தியேட்டருல போட்டுக்காட்டினாங்க. என்னைய அந்த பெரிய திரையில பாத்ததும் ஆச்சரியப்பட்டுப்போனேன். நாம நல்லா நடிச்சிருக்கோம்னு நினைச்சு பெருமைப்பட்டுக்கிட்டேன். ஆனா, ரோட்டுல நிர்வாணமா ஓடுன அந்தக் காட்சிய பாத்ததும் வெடிச்சு அழுதுட்டேன். எப்படியெல்லாம் பேரெடுத்து எப்படியெல்லாம் வாழ்ந்தோம். ஆனா, இப்போ இப்படி பரிதாபமான காட்சியில நடிச்சிருக்கோமேன்னு நினைச்சு வெக்கப்பட்டு தலைய குனிஞ்சிக்கிட்டு கண்ணீர் விட்டு அழுதேன். அதுக்கப்பறமாதான் நாம மக்கள் மனசுல எந்த அளவுக்கு இடம்பிடிச்சிருக்கோம்னு தெரிஞ்சது. நான் போற போற இடத்துல எல்லாம் நல்லா மரியாத கெடைச்சது. வியாபாரத்துக்கு போகும்போது எல்லாரும் என்னைய அடையாளம் கண்டுக்கிட்டாங்க. செல்ஃபிலாம் எடுத்தாங்க" என்கிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தங்கராசுவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அவர் மார்க்கெட்டிற்கு சென்று வெள்ளரி வியாபாரம் பார்ப்பதை நிறுத்தவில்லை. இதற்கிடையில்தான் கொரோனா ஊரடங்கு பொருளாதார ரீதியாக இவர் வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. அதோடு, கடந்த 3 மாதங்களுக்கு முன் நெல்லையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி அவர் வீடும் இடிந்து விழுந்துள்ளது.

"நானும் எம்பொஞ்சாதியும் படிக்கல. நாமதான் படிக்கல. எங்க பொண்ணு அரசிளங்குமாரியையாச்சும் நல்லா படிக்க வச்சிடணும்னு ஆசப்பட்டேன். அதுவும் நல்லா படிக்கிற பொண்ணு. டீச்சருக்கு படிச்சிருக்கு. 'இவன்தான் இப்புடி சேலைய கட்டிக்கிட்டு தெருத்தெருவா ஆடுறான். ஒரே ஒரு பொண்ணு அதப்படிக்க வெக்காம இருந்துட்டானே' ன்னு ஒரு சொல்லு வந்து விழுந்துடக்கூடாதேன்னுதான் கஷ்டத்தப் பாராம அத படிக்க வச்சேன். இந்த வீடும் பழைய காலத்து வீடுதான். மழையில நல்லா தண்ணி தேங்கிக் கிடந்ததால பொதும்பிபோயி மேல் சுவரு இடிஞ்சு விழுந்துடுச்சு. நாங்க எல்லாருமே இங்கதான் ஒறங்கிட்டுக் கெடந்தோம். திடீர்னு சுவரு இடிஞ்சதும் பத்திரமா ஒதுங்கிக்கிட்டோம். நல்ல வேள அந்த நேரத்துல யாருக்கும் எதுவும் ஆகல. நாங்களும் எவ்வளவோ அதிகாரிங்களை பாத்தோம். யாரும் எந்த உதவியும் பண்ணல. அதுக்கப்பறமாதான் கலெக்டரு அய்யாவுக்கு மனு எழுதிப்போட்டோம். எங்க கஷ்டத்தப் புரிஞ்சிக்கிட்டு கலெக்டர் அய்யா உடனே ஆபீசுக்கு வர சொல்லிட்டாங்க. எம் பொண்ணுக்கு மாசம் பத்தாயிரம் சம்பளத்துல டைப்பிங் வேலை போட்டுக் கொடுத்துருக்காங்க. வீட்டுக்கும் ஏற்பாடு பண்ணித்தர்றதா சொல்லியிருக்காங்க" என்றவரின் கண்களில் அத்தனை பிரகாசம்.

பரியேறும் பெருமாள் தங்கராசு

அருகிலிருந்த பேச்சிக்கனி, "இந்த விஷயத்துல கலெக்டர் அய்யா இவ்வளவு சீக்கிரமா நடவடிக்கை எடுப்பாருன்னு நாங்க நெனைக்கவே இல்ல சாமி. வீடு இடிஞ்சதும் நாங்க முன்னாடி இருக்கிற குடிசையில வந்து தங்கிக்கிட்டோம். வெறகு அடுப்புலதான் சோத்தப் பொங்கி சாப்பிட்டுக்கிட்டு பொழப்ப ஓட்டிக்கிட்டு கெடக்கோம். கரெண்ட் இல்லாதததால எங்க பொண்ணை கூட தங்க வெச்சிக்க முடியாத சூழ்நிலை. அதனால, அத சொந்தக்காரவுக வீட்டுல தங்க வெச்சிருக்கோம். வீடு இல்லேங்கிற காரணத்துக்காவ பெத்தப் பொண்ண அடுத்தாளு வீட்டுல தங்க வைக்கிற கொடும வேற யாருக்கும் வரக்கூடாது. நாங்க இங்கயும் அது அங்கேயும்னு கெடந்து கஷ்டப்படுற நேரத்துலதான் கலெக்டர் அய்யா எங்களுக்கு இந்த உதவிய செஞ்சிருக்காவ. அவருக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சாமி" என்கிறார் கண்ணீரோடு.

"இந்தா புள்ள அதெல்லாம் சரியாகிடும். நாம வணங்குற சாமி நம்மள அப்டியெல்லாம் விட்டுறாது" என தன் மனைவிக்கு நம்பிக்கை அளித்த தங்கராசு தொடர்ந்து, "எங்களப்போல கலைஞர்கள் நெறையவங்க சாப்பாட்டுக்கே வழியில்லாம கஷ்டத்துல நொந்து நோவிப்போயி கெடக்குறாங்க. வெளியவே தெரியாம கஷ்டத்த மறைசிக்கிட்டு இருக்கிற நாட்டுப்புறக்கலைஞர்களோட வாழ்க்கைய அரசு நல்லபடியா அமைச்சுக்கொடுக்கணும்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிறேனுங்க" என்கிறார் கைகூப்பி.

"தங்கராசு கொடுத்த மனு எனக்குக் கிடைத்ததுமே ஒரு ஆட்சியரா நான் என்ன செய்யணுமோ அதை செய்திருக்கேன். அவங்க பொண்ணு நல்ல படிச்சிருக்காங்க. இவ்வளவு வறுமையிலும் அவர் தன்னோட பொண்ண படிக்க வெச்சிருக்காரு. அதனால, காண்ட்ராக்ட் அடிப்படையில அவங்களுக்கு வேலை போட்டு கொடுத்திருக்கோம். வீடு இடிந்து விழுந்ததால முதற்கட்ட நிவாரணமா ரூ.70 ஆயிரம் நிதியை உடனடியாக வழங்கியிருக்கோம். தொடர்ந்து அவருக்கு வீடு கட்டித் தருவதற்கான வேலைகளும் நடந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரமே அவங்களுக்கு முழு உதவியும் கிடைக்கும்" என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி