1200 x 80 DMirror

 
 

முகமது அலி சத்பரா மலையேறுபவர்களின் சர்வதேச சமூகத்தில் ஒரு திறமையான வீரராகவும், தனது சொந்த நாடான பாகிஸ்தானில் ஒரு ஹீரோவாகவும் நினைவுகூறப்படுகிறார்.

உலகின் மிக உயரமான 14 மலைச் சிகரங்களில் எட்டைத் தொட்ட ஒரே பாகிஸ்தானியர் முகமது அலி தான். இது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் உலகின் ஒன்பதாவது உயரமான சிகரமான நந்தா மலையை ஏறிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

பெப்ரவரி 5 ஆம் தேதி, கே -2 மலைச் சிகரம் மீது ஏற முயன்றபோது, அவர் மேலும் இரண்டு வீரர்களுடன் காணாமல் போனார். கே -2 உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலைச் சிகரம் (8,611 மீ) ஆகும். இது உலகின் மிக ஆபத்தான மலைச் சிகரங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது. முகமது அலியுடன் ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஜான் ஸ்னோரி மற்றும் சிலியைச் சேர்ந்த குவா பப்லோ ஆகியோரும் காணாமல் போயுள்ளனர்.

முகமது அலியின் மகன் சஜித்தும் இந்தக் குழுவில் ஒருவராக இருந்தார். குளிர்காலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி கே -2 ஏறுவதே தந்தை-மகன் இருவரின் திட்டமாக இருந்தது. இந்த முயற்சியில் முதலில் எந்த வெற்றியும் கிட்டவில்லை.

சஜித் உடல்நிலை மோசமடைந்ததால் 'பாட்டில்னெக்' என்ற இடத்திலிருந்து திரும்ப வேண்டியிருந்தது. 'டெத் ஜோன்' என்று அழைக்கப்படும் அளவுக்கு ஆபத்தான இடமான இந்த பாட்டில்னெக், கே -2 சிகரத்தின் உச்சிக்கு 300 மீட்டர் கீழே உள்ளது.

அவரது தந்தை மற்றும் இரண்டு மலையேறும் வீரர்கள் காணாமல் போன பிறகு, சஜித் ராணுவம் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியுடன் அவர்களைத் தேடும் முயற்சியை முன்னெடுக்கிறார். இது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மேம்பட்ட சி -130 விமானங்கள் மற்றும் அகச்சிவப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ராணுவம் இப்போது தேடல் நடவடிக்கையை மீண்டும் தொடங்க விரும்புகிறது

ஆனால் சஜித் இப்போது நம்பிக்கை இழந்துள்ளார். கடந்த வாரம் அவர், "தேடல் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஆனால் இப்போது எனக்கு, அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே அவர்களின் இறந்த உடல்களைக் கண்டுபிடிப்பதே மீட்புக் குழுவின் நோக்கமாக இருக்கவேண்டும். " என்று கூறினார்.

முகமது அலி சத்பாரா என்பவர் யார்?

Ali Sadpara and Jon Snorri

முகமது அலி சத்பரா 1976ல் வடக்கு பாகிஸ்தானின் பால்டிஸ்தான் பகுதியில் உள்ள சத்பரா கிராமத்தில் பிறந்தார். கால்நடை வளர்ப்பு இந்த பகுதியில் வாழும் மக்களின் முக்கிய தொழிலாகும். இங்குள்ள இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலையேறுபவர்களுக்குக் கூலிகளாக வேலை செய்கிறார்கள்.

முகமது அலி தனது தந்தை ஒரு கீழ்நிலை அரசு ஊழியராக இருந்த கிராமத்தில் நடுநிலைப்பள்ளி வரை படித்தார். இதன் பின்னர், அவரது குடும்பம் ஸ்கர்தூ நகரத்திற்குக் குடிபெயர்ந்தது. அங்கு முகமது அலி கல்வியைத் தொடர்ந்தார். இதன் பின்னர், அவர் மலையேறுதலில் ஈடுபட்டார்.

உள்ளூர் பத்திரிகையாளர் நிசார் அப்பாஸ் அவரது உறவினர் மற்றும் நண்பராவார். முகமது அலி குழந்தைப் பருவத்திலிருந்தே தனித் திறமை வாய்ந்தவராக இருந்தார் என்று அவர் கூறுகிறார்.

முகமது அலியை நினைவு கூரும் அப்பாஸ், "அவரது உடல்வாகும் பழக்க வழக்கமும் ஒரு விளையாட்டு வீரருக்கு உரியதாகவே இருந்தது. படிப்பிலும் அவர் சிறந்து விளங்கினார். அவர் ஒருபோதும் படிப்பில் தோல்வியடைந்ததில்லை. முகமதுவின் மூத்த சகோதரர் படிப்பில் குறிப்பிடும் படி சிறந்து விளங்கவில்லை. எனவே அவரது தந்தை இவருக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் அவர் கிராமத்திலிருந்து ஸ்கர்து நகரத்துக்குக் குடிபெயர்ந்தார். குடும்பத்தின் நிதி நிலை மிகவும் சிறப்பாக இல்லை, எனவே அவர் 2003-2004 ஆண்டுகளில் மலையேறுதலைத் தொடங்கினார்," என்று கூறுகிறார்.

மேலும் தொடரும் அப்பாஸ், "அவர் சென்ற பெரும்பாலான மலையேற்றங்கள் வெற்றிகரமாக இருந்ததால், அவர் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்தார். 2016-ல் குளிர்காலத்தில் நந்தா மலையை ஏறும் மூன்று பேர் கொண்ட அணியில் அவரும் இடம்பெற்றிருந்தபோது அவரது புகழ் மேலும் பரவியது. "

கராச்சியில் வசிக்கும் ஹமீத் உசேன் ஸ்கர்தூவில் டூர் ஆபரேட்டர் ஆக இருக்கிறார். அவர் முகமது அலியை 2012 முதல் அறிந்தவர்.

ஹமீத், "அவர் தைரியமானவர், மகிழ்ச்சியானவர், நட்பானவர். அவரும் அவரது உடலும் மிகவும் வலுவாக இருக்கும். சில சமயங்களில் நாங்கள் ஒன்றாக மலையேறுவோம். சில நேரங்களில் எனக்கு மூச்சு முட்டி, நான் களைப்பில் விழுந்து விடுவேன். ஆனால், அவர், இன்னும் உயரம் போவார். என்னையும் விரைவில் மேலே ஏற ஊக்கப்படுத்துவார்," என்று நினைவு கூறுகிறார்.

"2016 குளிர்காலத்தில் சத்பாரா பள்ளத்தாக்கிலிருந்து தியோசாய் மைதானம் நோக்கிய மலையேற்றத்தின் போது, பனிக் காற்று எலும்புகளுக்குள் ஊடுருவும் அளவு குளிர். அப்போதும் கூட முகமது அலி உற்சாகமாக நடனமாடியபடியே ஏறிக்கொண்டிருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, முகமது அலி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு மலையேற்றப் பயிற்சியும் அளித்து வந்தார்," என்றும் அவர் கூறினார்.

ஆக்சிஜன் இல்லாமல் கே-2 ஏறும் திட்டம் ஏன்?

left to right: Ali Sadpara, Jon Snorri and Sajjid Sadpara

அவர் ஜான் ஸ்னோரிக்கு ஒரு மலையேற்ற போர்ட்டராகப் பணிபுரிந்து வந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். மலையேறுபவர்களின் உடமைகளை உச்சி வரை கொண்டு செல்வதே அவரது வேலை. அதற்காகவே அவர் இந்தச் சமரசத்தை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது.

ஆனால் நிசார் அப்பாஸ் இதை ஏற்கவில்லை. ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பு குளிர்காலத்தில் கே -2 ஏறி முடிக்க நேபாள குழு ஒன்று முடிவு செய்தபோது, தானும் அவ்வாறு செய்ய விரும்புவதாக சத்பரா வெளிப்படையாகக் கூறினார். மேலும் ஒரு புதிய சாதனையைப் படைக்க, ஆக்ஸிஜன் இல்லாமல் செல்வேன் என்று கூறினார். அவர் இந்த சாதனையைப் படைக்கும் போது தன் மகனும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினார்.

ஜான் ஸ்னோரி உடன் முகமது அலி சத்பரா மற்றும் அவரது மகன் சஜித் சத்பரா

அவர் 25-30 மலையேற்ற வீரர்களுடன் ஏறத் தொடங்கினார். அவர்களில் சிலர் உள்ளூர் மக்கள், சிலர் வெளிநாட்டினர். ஆனால் அனைவரும் 8,000 மீட்டர் புள்ளியை அடைவதற்குள் திரும்பி வந்தனர் என்றும் 8,211 மீட்டர் உயரத்தில் 'பாட்டில்னெக்' -ஐ அடைந்தபோது, அவரது நிலையும் மோசமடையத் தொடங்கியது என்றும் அவரது மகன் சஜித் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

மேலும் கூறிய சஜித், "எங்கள் அவசரஉதவி கிட்டில் ஓர் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தது, அது அவசரகால சூழ்நிலையில் பயன்படுத்தப்படலாம். எனது தந்தை அதிலிருந்து சிறிது ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு சற்று சுதாரிக்கத் தயாரானார் " என்று தெரிவித்தார். ஆனால் சஜித் தனது ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தயார் செய்யும் போது, அவரது மாஸ்க் ரெகுலேட்டரிலிருந்து ஆக்ஸிஜன் கசியத் தொடங்கியது.

இதற்கிடையில், அவரது தந்தையும் இரண்டு வெளிநாட்டு வீரர்களும் பாட்டில்னெக்கையும் தாண்டி தொடர்ந்து ஏறத் தொடங்கினர். பின்னால் திரும்பிய தந்தை சஜித்தையும் தொடர்ந்து ஏறுமாறு கூறியுள்ளார்.

சஜித், "சிலிண்டரிலிருந்து ஆக்ஸிஜன் கசிந்து கொண்டிருப்பதாக நான் கத்தினேன். அவர் கவலைப்பட வேண்டாம், முன்னோக்கி ஏறு. சரியாகிவிடும் என்று கூறினார். ஆனால் முன்னோக்கிச் செல்வதற்கான வலிமை என்னிடம் இல்லை. எனவே நான் திரும்பி விட முடிவு செய்தேன். வெள்ளிக்கிழமை பிற்பகல் இது நடந்தது. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது அப்போது தான்" என்று கூறினார்.

சத்பரா ஏன் முன்னேற வேண்டும் என்று வற்புறுத்தினார் என்று சஜித்திடம் கேட்டபோது, "நேபாள வீரர்கள் சில வாரங்களுக்கு முன்னரே கே -2 ஏறி முடித்திருந்தனர். கே- 2 எங்கள் மலை என்பதால், அவரும் அதைச் செய்ய விரும்பினார்," என்று கூறினார்.

என்ன நடந்திருக்கும்?

பாட்டில்னெக்கைத் தாண்டியும் மூன்று பேர் ஏறுவதைத் தான் பார்த்ததாவும் அவர்கள் கே -2 இன் உச்சியை எட்டியிருக்கக் கூடும் என்றும் சஜித் கூறுகிறார்.

இறங்கும் நேரத்தில்தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் இறங்கும் நேரத்தில் சமநிலை சிறிது மாறினாலும், அவர்கள் நேராக மரணத்தைத் தழுவவேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சத்பராவை அறிந்தவர்கள், 'இதுபோன்ற தவறு அவரால் செய்யவே முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை ' என்று கூறுகிறார்கள்.

மலைப்பிரதேசத்தில் ஓர் ஆடு காயம் அடைந்தால், அடிவாரத்திற்குக் கொண்டு சென்று மருத்துவம் செய்வது கடினம் என்பதால் அதன் தொண்டையைக் கிழித்து அதனைக் கருணைக் கொலை செய்துவிடக்கூடிய பழக்கம் இருந்த போது கூட, சத்பாரா தனது ஆடு ஒன்று காயமடைந்தபோது அதைத் தோளில் சுமந்து சென்று சிகிச்சை செய்வித்ததை நினைவு கூறுகின்றனர் கிராமத்தினர்.

இந்த மக்கள் சத்பாரா திரும்பி வர முடியாது என்று நினைப்பது அவருடைய தோழர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு, அவர்களைக் காப்பாற்ற அவர் முயற்சித்திருக்க வேண்டும் என்பதே.

இருப்பினும், அன்று என்ன நடந்தது என்பது பற்றிய உண்மை தெரியாது. அவரது கிராம மக்கள் இன்னும் ஓர் அதிசயத்திற்காக காத்திருக்கிறார்கள்.

ஆனால், அவரது மகன் சஜித் சுட்டிக்காட்டியபடி, இதுபோன்ற ஆபத்தான சூழலில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் கடுமையான குளிர் (-80 டிகிரி செல்சியஸ்) நிலவும் பிரதேசத்தில் ஒரு வாரம் ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லை.

"மலையேற்ற வரலாற்றில் இதுவரையில் இப்படி நடக்கவில்லை. எனவே நாங்கள் ஓர் அதிசயம் நடக்கும் என்று நம்பியிருக்கிறோம்," என்று சஜித் பிபிசியிடம் கூறினார்.

BBC

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி