உலகச் சந்தையில் WTI மற்றும் Brent ரகக் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதற்கமைய WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தக அமர்வுடன் ஒப்பிடுகையில் 0.59 சதவீத வீழ்ச்சியாகும்.
அதேபோல் Brent ரகக் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 97.31 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் வீழ்ச்சி 1.06 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், Murban ரகக் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிதளவு உயர்வடைந்துள்ளதுடன், அது 99.17 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
கடந்த வர்த்தக அமர்வில் அதன் பீப்பாய் ஒன்றின் விலை 95.89 அமெரிக்க டொலராக முடிவடைந்த போதிலும், தற்போது முன்னர் பதிவான விலையுடன் ஒப்பிடுகையில் 3.28 டொலர் அல்லது 3.42 சதவீத உயர்வாய்ப் பதிவாகியுள்ளது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, ஈரானுடனான இராணுவ மோதல்கள் தணியக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்புகளே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஈரானுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுமாயின், ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமிருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட இக் கூற்றுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மோதல்கள் மேலும் தீவிரமடையும் அபாயம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளின் நிலவரம்
| கச்சா எண்ணெய் வகை | தற்போதைய விலை (USD) | முந்தைய அமர்வுடனான மாற்றம் |
| WTI (West Texas Intermediate) | $ 90.59 | 0.59% வீழ்ச்சி |
| Brent Crude | $ 97.31 | 1.06% வீழ்ச்சி |
| Murban Crude | $ 99.17 | 3.42% (+$3.28) உயர்வு |


