Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அடக்குமுறையை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு கடிதம்!

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2021 • 5:40 PM

அடக்குமுறையை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு கடிதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் இணை இணைப்பாளர்களான சில்வெஸ்டர் ஜயக்கொடி மற்றும் ரஞ்சன் சேனாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களைத் இரகசிய பொலிஸார் தேடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலை நீடிக்குமானால், தொழிற்சங்க உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டியேற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
  • நியாயமற்ற அடக்குமுறை நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பிம்பத்தை கடுமையாக பாதிக்கும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
கொத்தலாவல சட்டத்தின் கீழ் இலவச கல்வியின் பேரழிவுக்கு எதிராக அமைதியான போராட்டத்தின்போது எந்த மோதலையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை எனவும், அந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் நாட்டில் உள்ள புகழ்பெற்ற தொழிற்சங்கங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் செப்டம்பர் 17 வெள்ளிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில், பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக ஓகஸ்ட் 3 ஆம் திகதி, மாணவர் இயக்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நடத்திய போராட்டம் தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட ஐந்து மாணவர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்தின் இணை இணைப்பாளர்களான சில்வெஸ்டர் ஜயக்கொடி மற்றும் ரஞ்சன் சேனாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், தொழிற்சங்கத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களைத் இரகசிய பொலிஸார் தேடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை, மாணவர்களின் பரீட்சைகள் மற்றும் சில கைதிகளின் உடல்நலக்குறைவு ஆகியவற்றைக் காரணம் காட்டி நியாயமான பிணை விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தாலும், அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.”

தற்போது சிறையில் இருக்கும் பல சகோதர சகோதரிகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான வைத்திய வசதிகள் கூட வழங்கப்படாமல் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமருக்குத் தெரிவித்துள்ளனர்.

நியாயமற்ற அடக்குமுறை நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பிம்பத்தை கடுமையாக பாதிக்கும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

”அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்குமாறு நியாயமான கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும், அதனை வழங்காமல், தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் சதுர சமரசிங்க, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், கொத்தலாவல சட்டத்திற்கு எதிரான செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் மஹிம் மெண்டிஸ் மற்றும் பிற தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்வதாக அச்சுறுத்துவதானது, நாட்டின் நீதி மற்றும் அமைதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த உங்களுக்கும், உங்கள் அரசாங்கத்தின் விம்பத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை, பொது மற்றும் தனியார் துறைகளில் பல தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், ஒரு சுயாதீன அமைப்பாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.”  
Student activitist

கருத்து வெளியிடுதல், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் மற்றும் அதற்கென ஒன்றிணைதல் போன்ற விடயங்கள் தொடர்பில், அரசியல் யாப்பு ரீதியாகவும், சர்வதேச ரீதியிலும் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட சமவாயங்களுக்கு எதிராகவும், செயற்படுவதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலை நீடிக்குமானால், தொழிற்சங்க உறுப்பினர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டியேற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் நீக்கி தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கவும், மாணவர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்வதைத் தடுக்கவும், இரண்டு தொழிற்சங்கத் தலைவர்களும்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதத்தின் நகல்கள் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,  சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தின் தலைவர், மனித உரிமைகள் அலுவலகத்தின் இலங்கை பணிப்பாளர், ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், தொழில்சார் ஊடக தொழிற்சங்க கூட்டமைப்பு, ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு, தபால் மற்றும் தொலை தொடர்பு அலுவலர் சங்கம், இலங்கை தொழில்முறை ஊடகவியலாளர் சங்கம், ஐக்கிய பொது சேவையாளர் சங்கம், வணிக மற்றும் தொழில்துறை ஊழியர் சங்கம், காப்புறுதி  ஊழியர் சங்கம், அனைத்து தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், ரயில்வே தரப்படுத்தப்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு, தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம், உணவு, பானம் மற்றும் புகையிலை தொழிலாளர் சங்கம், தேசிய சுதந்திர வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள், பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து செயற்படுகின்றன.  
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...