2019ஆம் ஆண்டில் நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்சிக்கு (Mohamed Morsi) ஏற்பட்ட அதே கொடூர விதி தனக்கும் ஏற்படக்கூடும் எனத் தனது தந்தை ஏற்கனவே எச்சரித்திருந்ததாக இம்ரான் கானின் மகன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனக்குச் சிறையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகக் கூறிய ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், அவரைப் பற்றி எவரும் எதனையும் அறிந்துகொள்ளவில்லை என அவரது மகன் சுலைமான் கான் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியச் செல்வந்தரான ஜெமிமா கோல்ட்ஸ்மித்துடனான (Jemima Goldsmith) முதலாவது திருமணத்தின் மூலம் பிறந்த சுலைமான் கான், தனது தந்தையின் உயிருக்கு ஆபத்து நிலவுவதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளமைக்கு பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரையே (General Asim Munir) பொறுப்புக் கூறியுள்ளார்.
74 வயதான இம்ரான் கான், ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராவல்பிண்டியிலுள்ள புகழ்பெற்ற அடியாலா (Adiala) சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறையில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அவரது மோசமடைந்து வரும் சுகாதாரம் குறித்து அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாகக் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
100க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தானின் முன்னாள் தேசியக் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கான், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள அவர், அவை அரசியல் பழிவாங்கல் நோக்கத்தைக் கொண்டவை என விவரித்துள்ளார்.
பல மாதங்களாகத் தனது குடும்பத்தினரோ அல்லது தனது தந்தையின் சட்டத்தரணிகளோ அவரிடமிருந்து எவ்வித தகவலையும் பெறவில்லை எனச் சுலைமான் கான் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


