அமெரிக்கத் தாய்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (DHS) இரகசிய நடவடிக்கைகள் மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகள் 40,000 க்கும் மேற்பட்டோரின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையடுத்து அந்நாட்டின் அரசு உளவுத் துறை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இரகசியத் தரவுகளைப் பகிரங்கப்படுத்தும் 'Distributed Denial of Secrets' என்ற இணையத்தளம் இவ் அதிர்ச்சி வெளிப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதான நிறுவனமான தாய்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS), இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இத்தரவுக் கசிவு குறித்து ஆராய்ந்து வருவதாகவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இரகசிய நடவடிக்கைகளும் சைபர் புலனாய்வாளர்களும்
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவு (ICE), சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு (CBP) மற்றும் சைபர் பாதுகாப்பு முகவரகம் (CISA) ஆகிய பிரதான நிறுவனங்களின் அதிகாரிகளின் தகவல்கள் அடங்கியுள்ளன.
அப்பட்டியல்களில் அதிகாரிகளின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் மாத்திரமன்றி, விசேட நடவடிக்கைகள், கணினித் தடயவியல் பரிசோதனைகள் மற்றும் இரகசிய உளவு பார்த்தல் (Undercover work) போன்ற உணர்வுபூர்வமான துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் யார் என்ற விபரங்களும் பதிவாகியுள்ளமை மிகப்பாரதூரமான ஆபத்தான சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.
உணர்வுபூர்வமான துறைகளில் பணியாற்றும் இத்தகைய அதிகாரிகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுவதானது அவர்களின் உயிர்களுக்கு மாத்திரமன்றி நடைமுறையிலுள்ள தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும் எனப் பாதுகாப்பு அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
'தகவல் நியாயப்படுத்தல்' மற்றும் சூத்திரதாரிகள்
'Department of Peace' என்ற பெயரில் தோன்றும் குழுவொன்றினால் இத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், எவரும் இலகுவாகத் தேடக்கூடிய வகையில் தேடுபொறி முறைமையொன்றும் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
"அவர்களிடம் எமது தகவல்கள் இருக்குமாயின், நம்மிடம் அவர்களின் தகவல்கள் இருப்பதும் நியாயமானதே" என அக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு இத்தரவுக் கொள்ளையை நியாயப்படுத்த முயற்சித்துள்ளது.
தாய்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் பயன்படுத்தும் 'Okta' எனப்படும் உள்நுழைவுச் சேவை முறைமை ஊடாக இத்தரவுகள் பெறப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், தமது முறைமைகளில் எவ்வித பாதுகாப்பின்மையோ அல்லது அனுமதியற்ற உள்நுழைவோ இடம்பெறவில்லை என Okta நிறுவனம் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது.


