உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளை நேற்று (30) பதிவாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான "பைனான்ஸ்" (Binance) வரலாற்றில் என்றும் இல்லாதவாறான பிரம்மாண்டக் கொள்ளைக்கு உள்ளாகியமையைத் தொடர்ந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதற்கமைய, பைனான்ஸ் நிறுவனத்திடம் காணப்பட்ட 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான டிஜிட்டல் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
பைனான்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக்கர் ஒருவருக்கு வெளிப்பட்டமையிலிருந்தே இத்திருட்டு ஆரம்பமாகியுள்ளதாக தற்போதைக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனைத் தொடர்ந்து பைனான்ஸ் வலையமைப்பில் காணப்பட்ட பாதுகாப்பு இடைவெளிகள் ஊடாக முறைமைக்குள் ஊடுருவுவதற்கு ஹேக்கர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
இதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பைனான்ஸ் நிறுவனம், 'டெதர்' (Tether) உட்பட ஏனைய கிரிப்டோகரன்சி நிறுவனங்களுடன் இணைந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கிரிப்டோ நாணயங்களின் பயன்பாட்டை முடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்ததாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், தனது பரிவர்த்தனை தளம் ஊடாகக் கிரிப்டோ நாணயங்களை வெளியேற்றுவதை பைனான்ஸ் நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், தனது வாடிக்கையாளர்களின் அனைத்து வைப்புகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு இழப்பையும் நிறுவனமே ஈடு செய்யும் எனவும் பைனான்ஸ் நிறுவனம் பின்னர் அறிவித்துள்ளது.
அதற்காக 6.3 பில்லியன் டொலர்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் முதன்மை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் டெங் (Richard Teng) தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த ஹேக்கர் தாக்குதலின் பின்னணியில் 'ட்ரேடர் ட்ரேட்டர்' (TRADER TRAITOR) எனப்படும் வட கொரிய ஹேக்கர்கள் குழுவொன்று உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சைபர் தளத்தில் நிதித் திருட்டுகளை மேற்கொள்வதன் மூலம் வருமானம் ஈட்டுவதாக வட கொரியா மீது பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் இடம்பெற்ற கிரிப்டோகரன்சி மோசடிகள் தொடர்பில் சைபர் பாதுகாப்பு நிறுவனங்களும் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) அமைப்பும் வட கொரியா மீதே குற்றஞ்சாட்டின.
எவ்வாறாயினும், அக்குற்றச்சாட்டுகளை வட கொரியா நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் சொத்துகளைக் கொள்வனவு செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் பரிமாற்றம் செய்யவும் வசதியளிக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் உலகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களின் எண்ணிக்கை சுமார் 335 மில்லியனாகும்.
2025 ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையின்படி, அந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் டிஜிட்டல் சொத்துகளின் பெறுமதி 162.8 பில்லியன் டொலர்களாகும்.
பைனான்ஸ் நிறுவனத்தின் இக்கிரிப்டோகரன்சி கொள்ளையைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் கிரிப்டோகரன்சி சந்தையின் விலைகளில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது.
அதில் பைனான்ஸ் கிரிப்டோ நாணயத்தின் பெறுமதி 5% ஆலும், உலகின் முதன்மை கிரிப்டோ நாணயமான பிட்கொயினின் (Bitcoin) பெறுமதி 3% ஆலும் வீழ்ச்சியடைந்தன.
பைனான்ஸ் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரியுமான சங் பெங் ஷாவோ (Changpeng Zhao - CZ) தனது 'X' கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளதாவது, கொள்ளையடிக்கப்பட்ட கிரிப்டோ சொத்துகளை மீளக் கைப்பற்றுவதற்காகச் சட்ட அமலாக்க அதிகாரிகள், கிரிப்டோகரன்சி வெளியீட்டாளர்கள் மற்றும் பிளாக்செயின் உளவு முகவர்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


