ஏழு வயதில் படகில் வந்து மீட்கப்பட்ட இலங்கை இளைஞரொருவர் தனக்கு அடையாள அட்டையினை வழங்கி உதவுமாறு ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த 37 வயதான ஜோய் என்ற இளைஞரே இக்கோரிக்கை மனுவை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மனுவைக் கையளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் குறிப்பிட்டதாவது:
"நான் இலங்கையைச் சேர்ந்தவன். மீனவரான எனது தந்தை, மீன்பிடிக்கச் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த 1997 ஆம் ஆண்டில் நான் படகில் தூங்கிக் கொண்டிருந்த போது, எனது தந்தையின் படகைப் பயன்படுத்தி சிலர் இராமேஸ்வரத்திற்கு வந்துவிட்டனர். அதில் எனது பெற்றோர்கள் இருக்கவில்லை. அங்கிருந்த இந்திய இராணுவத்தினர் எங்களைப் பிடித்து மண்டபம் இலங்கைத் தமிழர் முகாமிற்கு அழைத்துச் சென்றனர்."
"நான் 7 வயதுச் சிறுவனாக இருந்த காரணத்தினால் என்னை ஆசிரமத்திற்கு மாற்றினர். நான் வளர்ந்ததும் கடந்த 2014 இல் மண்டபம் முகாமிற்குக் கொண்டு வந்த போது, அங்கிருந்த அதிகாரிகள் என்னிடம் அடையாள அட்டை மற்றும் பெற்றோரின் விபரங்களைக் கேட்டனர்."
"எனக்கு எதுவுமே தெரியாததால், இலங்கை செல்ல முயன்றதாகக் கூறிப் புழல் சிறையில் அடைத்தனர். ஒரு வருடத்திற்கு மேலாகச் சிறையிலிருந்த நிலையில், என்னை இலங்கைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது."
"இதையடுத்து மீண்டும் மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டேன். அங்கும் அடையாள அட்டை வழங்கப்படாமல், 3 வேளை உணவு மாத்திரமே வழங்கப்பட்டது. எங்குச் செல்வதற்கும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை."
"முகாமில் இருந்து வெளியேறிச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் என் பிரச்சினையைத் தெரிவித்தும் அவர்களும் என்னை என் பெற்றோருடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் கைதாகி மண்டபம் முகாமில் அடைக்கப்பட்டேன். பின்னர் மீண்டும் வெளியேறி, பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆட்சியர், காவற்துறை கண்காணிப்பாளர் எனப் பலரைச் சந்தித்தேன்."
"என்னை இலங்கைக்கு அனுப்புங்கள் அல்லது இங்கு வாழ எனக்கு அடையாள அட்டையொன்றை வழங்குங்கள் என வேண்டுகோள் விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாழ வழியமைத்துக் தருமாறு கோரிப் பலமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளேன். அடையாள அட்டை இல்லாததால், வேலைக்கும் செல்ல முடியாமல் உள்ளது."
"தற்போது பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தங்கியிருந்து கிடைக்கும் உணவை உட்கொண்டு வருகிறேன். சிலருக்குக் கால்பந்து விளையாட்டுப் பயிற்சி அளித்தும் பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்குக் கருணை காட்டி, அடையாள அட்டையைப் பெற்றுத்தர வேண்டும்," என இளைஞர் ஜோய் தெரிவித்தார்.
இதனிடையே, காவற்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த 'கியூ' பிரிவு (Q Branch) பொலிஸார், இளைஞர் ஜோய்யிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிகத் தகவல் மூல இணைப்புகள்:


