கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை மேலும் தொடரக்கூடும் என்று
வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வெளியில், வீதிகளில் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலைமைகளிலிருந்து பாதுகாக்க, சுகாதார அதிகாரிகள் மக்கள் அதிக தண்ணீர் குடிக்கவும், இயற்கை திரவங்களை அதிகமாக உட்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளைய தினம் (17) கலந்துரையாடல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிக சூரிய ஒளியில் இருப்பதனை தவிர்க்குமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ கோரியுள்ளார்.
இலங்கை உட்பட உலகின் மத்திய ரேகை பகுதியில் உள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவுகிறது.
அதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையினால் உடல் வெப்பநிலை அதிகரித்து பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவில் நீர், இயற்கை பானங்களை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.