அமெரிக்க ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு
சவாலாக இருந்தாலும், இலங்கை அதன் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துவதிலும், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியைப் பராமரிக்க முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவதானம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வொஷிங்டனில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2025 வசந்த கால கூட்டங்களில் (2025 Spring Meetings) நேற்று (24) நடைபெற்ற பிராந்திய பொருளாதாரக் கண்ணோட்டம் - ஆசியா மற்றும் பசிபிக் அமர்வில் கலந்துக்கொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தொடர்ந்து கருத்து வௌியிடுகையில்,
"மிக சமீபத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. புதிய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
அந்தச் சூழலில் கிடைத்த காலத்தில் வரி விதிப்பு தாக்கம் மற்றும் அவை பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கான ஒரு பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதற்கு போதுமான இருக்கவில்லை. எங்கள் குழு திரும்பிய பிறகும் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பொதுவாக பாரக்கும் போது, இலங்கை வரி ஊடாக பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு என்று கூறலாம். ஆடைத் தொழில் துறையில் ஏற்படக்கூடிய தாக்கம் மிகப்பெரியது. இது ஏனைய துறைகளையும் பாதிக்கிறது. வரிகளால் கணிசமாக பாதிக்கப்படக்கூடிய ஒரு நாடு என்றால் அதற்கு இலங்கை மிகச்சிறந்த உதாரணமாகும்.
இலங்கை மட்டுமல்ல, இந்த தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய ஏனைய நாடுகளும் இந்த நேரத்தில் தங்கள் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துதல், பிராந்தியத்திற்குள் நல்ல ஒருங்கிணைப்பைப் பேணுதல் போன்றவற்றின் மூலம் தாக்கத்தைக் குறைக்க உதவலாம்.
இலங்கையில் முதலீட்டை அதிகரிப்பதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அது வரி விலக்குகள் மூலமாக இருக்கக்கூடாது. இலங்கையின் நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிதி ஒழுங்கு தொடர்ந்து பராமரிக்கப்படுவது கட்டாயமாகும். அந்த நிலைமைகளைப் பராமரிப்பதன் மூலமும், தனியார் முதலீட்டை ஊக்குவிக்கத் தேவையான சூழலை உருவாக்குவதன் மூலமும் முதலீட்டை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்."