பஹல்காமில் 'பாதுகாப்பு குறைபாடு' இருந்ததை மத்திய அரசு சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது, எதுவும் தவறாக நடக்கவில்லை என்றால், நாம் ஏன் இங்கே அமர்ந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அங்கு கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு எங்கோ குறைபாடுகள் இருந்துள்ளன என்பதையும் அமித்ஷா ஒப்புக்கொண்டார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க, டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் சமாஜ்வாதி, திரிணாமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் முழுமையாக ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கூறின,
அதேநேரம் பஹல்காமில் பைசரன் புல்வெளியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனை மத்திய அரசும் சூசகமாக சுட்டிக்காட்டியது. எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூட்டத்தில் அமித்ஷா பேசும் போது, "எதுவும் தவறாக நடக்கவில்லை என்றால், நாம் ஏன் இங்கே அமர்ந்திருக்க வேண்டும்? நாம் கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு எங்கோ குறைபாடுகள் இருந்தன" என்று ஒப்புக்கொண்டார்.
வெளியான தகவல்களின் படி, அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் ஏன் நிறுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். அதேபோல் பாதுகாப்பு நெறிமுறை மற்றும் உளவுத்துறையின் தோல்வி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசும் சில பதில்களை கூறியதாம். அதன்படி, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரன் பகுதியை திறப்பதற்கு முன்பு உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்பு படைகளுக்கு தகவல் தெரிவிக்க தவறி விட்டதாகவும் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தில் கூறியதாம்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் ஆதரிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதியளித்தன. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது மற்றும் அரசாங்கம் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
அதேபோல் பயங்கரவாதம் மீதான மத்திய அரசின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவாக இருப்பதாக அறிவித்தன. இதற்கிடையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதற்கான அதன் முடிவை அரசாங்கம் எவ்வாறு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-ஒன் இந்தியா