முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமீபத்தில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை விமர்சித்திருந்தார்.

இன்று (மே 14) பிற்பகல் 2.00 மணிக்கு குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி)  வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வட மாகாணத்திற்குச் செல்ல புத் தளம் மாவட்டத்தில் வசிக்கும் 12,500 இடம்பெயர்ந்தோருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்தமை சம்பந்தமாக குற்றவியல் புலனாய்வுத் துறை முன்னாள் நிதியமைச்சரை வரவழைத்ததாக காவல்துறையின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் உள்ள இடம்பெயர்ந்தோரின் திட்ட மேலாண்மை பிரிவு புத்தளத்தில் உள்ள இலங்கை போக்கு வரத்து சபைக்கு  பணம் செலுத்தியது சம்பந்தமாக விசாரணை நடாத்துவதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த இந்த நபர்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களிக்க போக்குவரத்து வசதியை வழங்குமாறு 'இடம்பெயர்ந்தோர்' அமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டது. அதன்படி, பிரதமரின் மக்கள் தொடர்பாளர் கோரிக்கைக்கு இணங்க மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோருக்கு வாக்குச் சாவடிக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளைப் பெறுவதற்காக இ.போ.ச பணம் செலுத்த முன்னாள் நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடமிருந்து இன்று ஒரு அறிக்கையைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

பல தசாப்தங்களாக இடம்பெயர்ந்த தமிழர்களும் முஸ்லிம்களும்:

பல தசாப்தங்களாக இடம்பெயர்ந்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினை இன்னும் எரியும் பிரச்சினையாகவே உள்ளது.

1990 ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் ஆகின்றன. 1995 முதல் யாழ்ப்பாணம் இலங்கை இராணுவத்தின் கீழ் உள்ளது, ஆனால் ராஜபக்ஷ அரசாங்கமோ அல்லது நல்லாட்சி ஆட்சியோ இந்த முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தத் தவறிவிட்டன.

எனவே, ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்ஷ அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்க இ.போ.ச பேருந்துகள் வழங்கப்பட்டது குறித்து விசாரணை என்ற போர்வையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களை வேட்டையாடுவதை நிறுத்தி, பல தசாப்தங்களாக இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும்.

இருப்பினும், பொதுத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டு சிங்கள தீவிரவாதிகளை மகிழ்விக்க முயற்சிக்கும் ராஜபக்சர்களிடமிருந்து சிறுபான்மையினருக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நினைப்பது நகைப்புக்குரிய விடயமாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி