உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முஸ்லிம் சட்டத்தரணி ஒருவரை கைது செய்து தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 14ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையானது, உள்ளூர் மற்றும் சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புகள் காணப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு புத்தளத்தில் வைத்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.

கைதுக்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்படாத நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

சட்டத்தரணி ஹிஸ்புல்லாவிற்கு, சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ள உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும், சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய மனித உரிமை அமைப்பு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான சட்டம் என்று முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கடுமையான விதிகளை மீறி முஸ்லிம் சட்டத்தரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டத்தின் படி, கைதி ஒருவர் 72 மணிநேர தடுப்புக் காவலின் பின்னர் அவருக்கு சட்ட உதவியைப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், அவர் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்களின் பின்னர், கடந்த 16 ஆம் திகதி முதல் ஹிஸ்புல்லாவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“கொடூரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் அரசாங்கத்தின் பொறுப்பை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை என, அந்த அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனர் பிரடெரிக் ரவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும், சட்டத்தரணி ஹிஸ்புல்லாவிற்கு சட்ட ரீதியாக தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை எனவும், இரகசியத்தன்மை பேணப்படுவதையும், சட்ட உதவியை நாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற அதிகாரி ஒருவர் தனது தொழிலை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு, தடையாக சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பதாக, 117 தனிநபர்களும், ஆறு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி