பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக, 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போர் 40 நாட்களை கடந்து தீவிரமாக நடந்து வருகிறது.

நீண்ட நாட்களாக போர் நடைபெறுவதால், காசாவில் உள்ள மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் அரசு முதல்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக தற்போது அறிவித்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு முறை 10 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கும், கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இருப்பினும், இது போர் நிறுத்தம் இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார். இது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும். ஹமாஸை முழுவதுமாக அழித்து, பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேலை அச்சுறுத்தும் சக்தி ஏதும் காசாவில் இல்லை என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு. அதேநேரம், அனைத்து பிணைக் கைதிகளை திரும்ப பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ‘‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது” என்று தெரிவித்திருந்தார். தற்போது 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை ஹமாஸ் அமைப்பும் வரவேற்றுள்ளது.

50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் அதேவேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி