கொழும்பு கோட்டை நீதவான் நிலுப்புலி லங்காபுராவால் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக அரசாங்க நிதியில் இருந்து 16.6 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்குட்பட்ட விஜயம் ஒரு உத்தியோகபூர்வ பயணம் அல்ல என்றும் அது தனிப்பட்ட பயணம் என்றும் கோட்டை நீதவான் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் நேன்று சமர்ப்பித்த ஆவணங்கள், விரிவான விசாரணைக்குப் பின்னரே ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, நேற்று முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில், மேற்படி விஜயத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழைக் கொண்டிருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த விஜயம் தனிப்பட்டதாகக் கருதப்படுவதால், இது பொதுச் சொத்துச் சட்டத்தின் விதிகளின் கீழ் வருகிறது. 1982இன் பொதுச் சொத்து (விசேட ஏற்பாடுகள்) சட்டம் இல. 12இன் பிரிவு 8(1)இன் கீழ் முறைகேடுகள் எதுவும் நிறுவப்படாததால், சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுகிறார் என்று நீதவான் அறிவித்தார்.
சந்தேகநபரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் அவதானித்தது. தற்போதைய உடல்நிலை குறித்த எந்த மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அடுத்த விசாரணைத் திகதியில் சந்தேகநபரின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த பொருத்தமான மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதவான் பணிப்புரை வழங்கினார்.
கூடுதலாக, சந்தேகநபரின் வழக்கறிஞர், எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தபோது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு வாதிட்டது, பிணை கோரிக்கைக்கு பொருத்தமானது அல்ல என்றும் நீதவான் தெளிவுபடுத்தினார்.