விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு பணம் அங்கீகரிக்கப்பட்டமை
தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (23) இடம்பெற்ற பொலிஸாரின் விசேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்ததோடு, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், அவரை கைது செய்வது தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்று நீதிமன்றத்தில், “முன்னாள் ஜனாதிபதி செயலாளர் இங்கு தவறான முறையில் செயற்பட்டுள்ளார். அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை சரியான பாதைக்கு வழிநடத்த வேண்டும். அரச நிதியை தனது விருப்பப்படி பயன்படுத்த முடியாது.” என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டிலீப பீரிஸ் கருத்து தெரிவித்ததோடு, இந்த பயணத்திற்கான செலவினங்களுக்கு முன்அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திரும்பும் வழியில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் அழைக்கப்பட்டிருந்தார்.
நான்கு மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஏறக்குறைய 07 மணிநேரம் நீடித்த வழக்கு விசாரணையின் பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, சந்தேகநபரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு காரணமான சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.