வயது மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதல் 24 மணிநேரத்திற்கு அவரைத் தீவிர கண்காணிப்பில் வைப்பது
பொருத்தமானது என நிபுணத்துவ மருத்துவர்கள் தீர்மானித்ததால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சுகவீனமடைந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு, கடுமையான சோர்வு, களைப்பு காரணமாகவே இவ்வாறு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியை, சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவக் குழு மற்றும் பிற நிபுணத்துவ மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தீர்மானித்தனர்.