2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை

தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (22) குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.

எம்.கே.சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று (22) முன்னிலையாகிய போது, குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை  சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபன் என்ற இராசையா பார்த்தீபனின் 33வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை 2020 செப்டெம்பர் 15ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் கோண்டாவில் கோகுல வீதியில் நடத்தினார் என்றும், 2011 ஓகஸ்ட் 29ஆம் திகதி விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விதிகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

2022ஆம் ஆண்டு சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட 7 தவணைகளில் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

கடந்த  ஓகஸ்ட் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குற்றஞ்சாட்டப்பட்ட சிவாஜிலிங்கம் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டத்தரணி உதார முஹந்திரத்தின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் சட்டத்தரணி றியன்சி அரசகுலரத்ன, இரட்ணவேல் ஊடாக சிவாஜிலிங்கம் நேற்று நீதிமன்றில் முன்னிலையானார்.

தமது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ளதாகவும், இது குறித்து அறிந்த பின்னர் அவர் இன்று (22) நீதிமன்றத்தில் ஆஜராகியதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்க வேண்டுமென்றும், அவரை விளக்கமறியலில் வைப்பது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், மேல் நீதிமன்ற நீதிபதி தனக்குள்ள அதிகாரத்தின்படி, பிணை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட அனைத்தையும் பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சிவாஜிலிங்கத்தை  பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

பின்னர் இந்த வழக்கை ஒக்டோபர் 20ஆம் திகதி விசாரணைக்கு  அழைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சிவாஜிலிங்கத்தை கைது செய்த போது கைப்பற்றிய வாழைக்குற்றி, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் சான்றுப் பொருட்களாக குறிப்பிட்டிருந்தனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி