வறுமையினை விற்கும் அரசாங்கத்திற்கு பதிலாக வறுமையினை ஒழிக்கும் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர்
அநுர குமார திசாயநாயக்கா தெரிவித்துள்ளார். அம்பாறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றி அநுர குமார திசாநாயக்கா மேலும் கூறியதாவது,
“தற்போது தேர்தல் ஒன்று வந்திருக்கின்றது. எனினும் இம்முறை இது ஒரு தேர்தல் காலமாகத் தெரியவில்லை. நத்தால் காலத்தைப் போன்றிருக்கின்றது. ஒருவர் கூறுகின்றார், நான் வெற்றி பெற்றால் வேளான்மைச் செய்கைக்கு இலவசமாக உரம் தருவேன் என்று. இன்னொருவர் தான் வெற்றி பெற்றால் அனைத்து பயிர்ச் செய்கைக்கும் இலவசமாக உரம் தருவேன் என்கிறார்.
பிள்ளைகள் இருக்கும் இடத்தில் என்றால், நான் வெற்றி பெற்றால் ஒரு கப் பால் தருவேன் எனக் கூறுகின்றனர். பட்டதாரிகள் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் அரச தொழில் வழங்குவதாகக் கூறுகின்றனர். கர்ப்பிணித் தாய்மார் இருக்கும் இடத்தில், அனைவருக்கும் போஷாக்கு பொதி வழங்குவேன் என்கிறார்கள். நத்தால் தாத்தாக்கள் இருவர் வந்தததை்ப் போன்று.
நான் அனைவருக்கும் இலவசமான அரிசி வழங்குவேன் என அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கூறியபோது, எங்கிருந்து அந்தளவு அரிசியைக் கொண்டு வருவீர்கள் என யாரோ ஒருவர் திரும்ப கேட்டிருக்கின்றார். அப்போது அவர் கூறியிருக்கின்றார், நான் சந்திரனிலிருந்தாவது அரிசியைக் கொண்டு வந்து தருவேன் எனக் கூறியிருக்கின்றார். அதற்கும் மக்கள் கைதட்டியிருக்கின்றார்கள்” என்றார்.