சஜித் பிரேமதாசக்கள், கோட்டாபய ராஜபக்ஷக்கள் தேசிய பாதுகாப்பை பற்றி கூறும் விடயங்களால் மாத்திரம் மக்கள் தீர்மானங்களை

மேற்கொள்ளக் கூடாது என்றும், கோட்டாபய ராஜபக்ஷ தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்து வருவதாகவும் பெரட்டுகாமி சமாஜவாதி கட்சி தெரிவித்துள்ளது. நேற்று (28) பிலியந்தளையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“நான் இன்று உங்கள் முன் உரையாற்றும் நேரம் கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். எமக்குள்ள பிரச்சினை அதுவல்ல. செப்டெம்பர் 27ம் திகதி கோட்டாபயவை யாழ் நீதிமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

எமது கட்சியின் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் 2012ம் ஆண்டு டிசம்பர் 09ம் திகதி கோட்டபாய பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய காலத்திலேயே கடத்திச் செல்லப்பட்டனர். அப்போது மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக இராணுவத்தையும், பொலிஸையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலமாகும். எனவே இந்தக் கடத்தலுக்கு கோட்டாபய பொறுப்புக் கூற வேண்டிய ஒரவராகும்.  அவரை சாட்சியமளிக்கவே யாழ் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

செப்டெம்பர் 27ம் திகதி  நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்ததால் 24ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்று தனக்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளது,  எனவே யாழ் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அந்த உத்தரவைப் பெற்றுக் கொண்டு கோட்டாபய நீதிமன்றத்திற்கு வராதிருப்பது பாதுகாப்பு பிரச்சினையினால் அல்ல என நாம் கூறினோம்.

இன்று யாழ் சென்று கோட்டாபயவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியுமாக இருந்தாலும் யாழ் நீதிமன்றம் சென்று லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிக்க அவரால் முடியாது. காரணம் கோட்டாபய தேசிய பாதுகாப்பை பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி எதனைக் கூறினாலும் அவர்களது காலத்தில் எவ்வாறு லலித், குகன் ஆகியோர் காணாமல் போனார்கள் என்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்.  

இன்று அவர் எதனைப் பேசினாலும், ஊடகவியலாளர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதைப் பற்றி அவருக்குத் தெரியும். கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டமை அவருக்குத் தெரியும். பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அண்ணனும், பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய தம்பியும் இந்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிரானவர்களுக்குச் செய்த துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், மற்றும் படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி