கடந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் பிரதேச அரசியல்வாதிகள் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய போது, பெண்களுக்கு துன்புறுத்தல்களை வழங்கிய போது

எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காத பாதுகாப்புச் செயலாளர் இன்று பெண்களின் பாதுகாப்பது தொடர்பில் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.  நேற்று (27) இடம்பெற்ற மகளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அன்று பெண்களை விளையாட்டுப் பொருட்களைப் போன்று பயன்படுத்தியவர்களிடத்தில் இப்போது எவ்வாறு பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்? என்றும் பிரதமர் இதன் போது கேள்வி எழுப்பினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

“கடந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தினுள் பிரதேச சபை தலைவர்கள் பெண்களைப் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி விருந்துபசாரங்களை நடாத்தினார்கள். தங்காலை பிரதேச ஹோட்டல் ஒன்றினுள் இடம்பெற்ற பெண் பாலியல் வல்லுறவுச் சம்பவத்தை நாட்டின் அனைவருமே அறிந்து கொண்டார்கள். இவ்வாறு பெண்களை வல்லுறக்கு உட்படுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பல அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவர் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அவ்வாறு சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் பொலிஸூக்குரிய அமைச்சின் செயலாளர் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. அக்காலத்தில் பொலிஜூக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பீர்களா? என இந்நாட்டுப் பெண்களிடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

பத்து வருட ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தினுள் அரசியல்வாதிகளால் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக அமைச்சரும், அமைச்சின் செயலாளரும் இணைந்து அவ்வாறானவர்களைப் பாதுகாத்தார்கள்.  அவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவர்களைச் சிறைக்கு அனுப்பவில்லை.  

இவ்வாறான பாதுகாப்புச் செயலாளர் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானால் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமா? பெண்கள் முன்னேறிச் செல்ல வாய்ப்பு கிடைக்குமா? நாட்டில் 52 வீதத்தையுடைய பெண்களுக்கு பாதுகாப்பை வழங்காதவர்களால் தேசிய பாதுகாப்பை பெற்றுக் கொள்ள முடியுமா?” என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி