வெளிநாட்டு நிறுவனமொன்று உருவாகி தந்துள்ள திட்டம் ஒன்றின் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறிடித்து, அதன்மூலம் எங்கள் வேட்பாளர் சஜித்

பிரேமதாசவின் வெற்றியை தடுத்த நிறுத்த, பிரதான எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் முன்னெடுக்கும் இந்த நான்கு முனை தந்திர திட்டம்  பற்றிய தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்த திட்டம் இன்று அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுபற்றி தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,  

வாக்காளர்களை திசை திருப்பி தந்திரமான முறையில் தேர்தல் வெற்றிகளை பெற்றுத்தருவதில் வெகுவாக கைதேர்ந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை  பிரதான எதிர்க்கட்சி வாடகைக்கு அமர்த்தியுள்ளது. மேற்கு, வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என நாடெங்கும் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் வாக்குகள் எக்காரணம் கொண்டும் எங்கள் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமதாசவுக்கு கிடைத்து விடக்கூடாது என்ற இந்த நான்கு முக திட்டத்தை  இந்த வெளிநாட்டு நிறுவனமே பிரதான எதிர்கட்சிக்கு உருவாக்கி தந்துள்ளது.  இதற்காக பெருந்தொகை கட்டணத்தை பெற்றுக்கொண்டுள்ள இந்நிறுவனத்தின் ஆலோசகர்கள்  இன்று தீவிரமாக  பிரதான எதிர்க்கட்சியினரின் வெற்றிக்காக பணியாற்றுகிறார்கள்.    

இதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட விசேட குழுக்கள், இந்த  நான்கு முனை தந்திர திட்டத்தை அமுல் செய்யும் நோக்கில் நாடு முழுக்க களமிறக்கப்பட்டுள்ளன. தற்போது எனக்கு இந்த நான்கு முக தந்திர திட்டத்தின் விபரங்கள் கிடைத்துள்ளன.  இதன்படி, பிரதான எதிரணியின் முதல் முகம், தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவி தனது சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க முயல்கின்றது. பிரதான எதிரணியின் இரண்டாம் முகம், தமக்கு தமிழ்-முஸ்லிம் மக்களின் வாக்கு கிடைக்காவிட்டால், இந்த தேர்தலில் போட்டியிடும் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தமிழ், முஸ்லிம் மக்களை வாக்களிக்க வைக்க முயல்கிறது. பிரதான எதிரணியின் மூன்றாம் முகம்,  தனது சின்னத்துக்கோ அல்லது தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்பாத தமிழ், முஸ்லிம் மக்களை, இந்த தேர்தலில் போட்டியிடும் ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு  வாக்களிக்க வைக்க முயல்கிறது. மேற்கண்ட நான்கு முயற்சிகளும் முடியாமல் போனால், பிரதான எதிரணியின் நான்காவது முகம், தமிழ் பேசும் மக்களை, குறிப்பாக தமிழ் வாக்காளர்களை, தேர்தல் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளாமல், தடுத்து, தேர்தலை பகிஸ்கரிக்க வைக்க முயல்கிறது.  

மேற்கண்ட நான்கு தந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் பிரதான எதிரணியின் நான்கு முகங்களும், திட்டமிட்டு பணியாற்றுகின்றன. இந்த நான்கு முனை திட்டங்கள் மூலமாக அளிக்கப்படும் அல்லது பகிஸ்கரிக்கப்படும் வாக்குகள், சஜித்துக்கு எதிரான வாக்குகள் என்பதால், எமது வரவேண்டிய  இந்த வாக்குகளை சிதறடித்து, அதன்மூலம் தாம் வெற்றி பெற்று விடலாம் என்பதே இவர்களது கனவு இலக்கு.

இதற்காக பிரதான எதிரணி பல முகவர்களை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரச்சார களத்தில் இறக்கியுள்ளது. அவர்களுக்கு பெருந்தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் சென்று பிரதான எதிரணிக்கு ஆதரவாக வாக்கு கோருகிறார்கள். அதேவேளை போட்டியில் உள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்கு கோர வேறு பல குழுக்கள் இவர்களால் களமிறக்கப்பட்டுள்ளன. தமக்கு வாக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, சஜித்துக்கு வாக்கு போகாமல், ஏனைய தமிழ், முஸ்லிம், சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதே சிறந்தது என இந்த வெளிநாட்டு நிறுவனம் தீர்மானித்துள்ளது.   

இத்துடன் நிறுத்தி விடாமல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், தமது பதிவுகள் மூலம் பிரபலமாகி பரிச்சயமாகியுள்ள  பலரை விலைக்கு வாங்கியும், போலி பெயர்களில் முகநூல் கணக்குகளை ஆரம்பித்தும், பல தமிழ், முஸ்லிம் சமூக ஊடகர்கள் திட்டமிடப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பிழையான பொதுஜன அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முகமாக களமிறக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் பகிஷ்காரம் என்ற கொள்கையை முன்னெடுப்பது இவர்களது தலையாய பணியாக ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.  இவை அனைத்தும் பிரதான எதிர்கட்சியால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டங்களாகும்.

வத்தளையில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்ட உரையாற்றிய அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கையின் இன்றைய அரசியலமைப்பின்படி, இலங்கையின் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் ஆகும். இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். சட்டப்படி சமமான ஆட்சி - தேசிய மொழிகள் என்பதற்காக, பெயர்பலகைகளில், ஒன்றின் மீது ஒன்றை எழுத முடியாது. ஆகவே வரிசையாக எழுத வேண்டும். வடக்கு, கிழக்கு தவிர்ந்த, ஏனைய மாகாணங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்றும் எழுத வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பிரதேச செயலக பிரிவில் அந்த மாகாணத்தில் பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியை தவிர்ந்த அடுத்த மொழி பேசுபவர்கள் அதிகமாக வாழ்ந்தால், இந்த வரிசை மாறலாம். ஆனால் ஆங்கிலம் எப்போதும் மூன்றாம் இடத்திலேயே எழுதப்பட வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பில் மொழி  தொடர்பான 4ம் அத்தியாயத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக மொழிகள்: 22. (1) இலங்கை முழுவதிலும் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டும். வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் தவிர்த்த இலங்கையின் எல்லா மாகாணங்களிலும் சிங்களம், இலங்கையின் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்பதுடன், அரச பொது பதிவேடுகளை பேணி வருவதற்காகவும், பகிரங்க நிறுவனங்களினால் அலுவல்கள் யாவும் கொண்டு நடத்தப்படுவதற்காகவும், சிங்கள மொழி பயன்படுத்தப்பட வேண்டும். வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ் மொழி அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும்.

14/நவம்பர்/1987 அன்று 13ம் திருத்தம் மூலம் மாகாணசபைகளாக அதிகாரப்பகிர்வு வந்தது. 17/டிசம்பர்/1988 (என் பிறந்த நாள்!!) அன்று 16ம் திருத்தம் மூலம் இந்நாட்டில் தமிழும் ஆட்சி மொழி ஆகியது. இவை இரண்டும் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட புலிகளின் போராட்டமே மூல காரணம். துணை காரணம் இந்திய அரசு. இந்த இரண்டு அழுத்தங்கள் காரணமாக இவை நிகழ்ந்தன. பிறகு புலிகளும் இந்திய அரசும் தமக்குள் சண்டையிட்டு நாசமாக போனது பின்கதை.

இன்று, இந்த இரண்டு திருத்தங்களையும் காப்பாற்றி முன்-நகர்த்த எம்மால் முடியும். அதை நோக்கியே நான் சிந்திக்கிறேன். பேசுகிறேன். செயற்படுகிறேன். பயணிக்கிறேன். இந்த தெளிவு எனக்கு இருக்கிறது. இது நம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். முக்கியமாக தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு இருக்க வேண்டும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி