இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம்

உறுதியாக நம்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டம் வெற்றியடைந்ததையடுத்து அமைச்சரவையில் பாரிய மாற்றம் இடம்பெறும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொண்ட பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 20ஆம் திகதி அதன் நிறைவேற்று சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதிலும் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் இலங்கை அதிகாரிகள் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், ஏனைய தரப்பினரிடம் இருந்து கடனுதவி பெறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும் என நிதியம் கூறுகிறது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து இலங்கைக்கு ஆதரவு கிடைக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் எதிர்பார்க்கும் சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கம் $2.9 பில்லியன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டியது.

இலங்கையின் மற்ற கடன் வழங்குநர்கள், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை இந்த செயல்முறையின் மூலம் அந்நியப்படுத்தப்படும் என்று IMF அறிவித்தது.

இதற்கிடையில், நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குபவர்களிடம் இருந்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை சலுகையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடனை 10 வருட காலத்திற்கு இடைநிறுத்தவும் 15 வருட காலத்திற்கு கடனை மறுசீரமைக்கவும் கோரிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 2 வருட கடன் தடைக்காலம் மட்டுமே உள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சீன எக்ஸிம் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உத்தரவாதக் கடிதம் இலங்கையின் பிரதித் தூதுவர் ஹு வெய்யிடம் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் உத்தரவாதம் தொடர்பான ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தால் நிபந்தனையாக விதிக்கப்பட்ட மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்குவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட “இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தை” சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சமர்ப்பித்தார்.

புதிய சட்டமூலத்தின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரம் எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, எந்தவொரு நபரும் மத்திய வங்கியின் ஆளுநரையோ அல்லது ஆளுனர்கள் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபையின் மற்ற உறுப்பினர்களையோ அல்லது மத்திய வங்கியின் ஊழியர்களையோ அவர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பயன்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தவோ அல்லது தலையிடவோ கூடாது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் தவணையை நாடு பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இதுவரையான வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான பலமான நாணயமாக இலங்கை ரூபா உள்ளது என CAL ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபா 11 வீதம் மற்றும் 8 வீதத்தினால் வலுவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி