அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது கொள்கை விளக்க உரையின் போது மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

13ஐ தான் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அவர் உறுதிப்படத் தெரிவித்திருந்தார். அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சரும் இதையே வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு இனப் பிரச்சினைக்கு தீர்வு

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் துரிதமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ் அரசியல் கைதிகளை கட்டம் கட்டமாக விடுதலை செய்ய நடவடிக்கை

“பல பிரதேசங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. முழுமையான வடக்கு மாகாணமும் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்கள் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தது.

இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்.

வடக்கில் காணி தொடர்பாக தீர்க்கப்படாத மேலும் பிரச்சினைகள் உள்ளதனை நாம் அறிவோம். பளாளி முகாமுக்காக கையேற்கப்பட்டுள்ள 100 ஏக்கர் காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன.

மேலும். காணிகள் தொடர்பாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அது தொடர்பாக இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. ஏனைய பாதுகாப்பு முகாம்களை அண்மித்த காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் காணிகள் தொடர்பில் பாரதூரமான பிரச்சனை காணப்படுகிறது. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காடுகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அச் சந்தர்ப்பத்தில் விமானப்படம் அடிப்படையாக கொள்ளப்பட்டது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களால் காடுகளாக்கப்பட்ட கிராமங்களின் பல காணிகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டன.

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் தமக்கு உரித்தான பல காணித் துண்டுகள் வனப்பிரதேசங்களாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளன.

மொனராகலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரை மக்கள் இப்பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள்.

1985 ஆம் ஆண்டின் வரைபடத்தின் பிரகாரம் காடுகள் மற்றும் காணிகளை மீண்டும் வர்த்தமானியில் வெளியிட்டு இந்த அநீதியை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

காணாமல் போன நபர்கள் தொடர்பாக கண்டறிவதற்கான முறைமையினை நாம் முறைமைப்படுத்தி துரிதப்படுத்துவோம்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் சிறைவைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றியும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். படிப்படியாக இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம்

“காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.

மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்துவோம்

இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இற்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

பெருந்தோட்டத் துறைக்காக பாரியளவு சேவையாற்றிய திரு செளியமூர்த்தி தொண்டமானும், நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம். நாம் இருவரும் பெருந்தோட்ட மக்களின் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம்.

தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியுள்ளோம். ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தொட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

200 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரத்தை வளம்பெறச் செய்வதற்கு பாடுபடும் அவர்கள் நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை மக்களின் ஒரு பிரிவினராக மாற்றப்பட வேண்டும்.

நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம்

“நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். இந்த யுத்தம் வடக்கு கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும்.

வடக்கு கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும் இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.

பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் வழி விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது.

நாம் பொருளாதார காலணித்துவத்திற்கு உட்படுவோம். ஆகவே நாம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்குதல் ஆகும்.

பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும்.

புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

‘புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்
ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்
பெண்களை வலுவூட்டும் சட்டம்
சிறுவர் பாதுகாப்பு சட்டம்
இளைஞர் நாடாளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்
போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.
எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.

அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

காலநலை மாற்றச் சட்டம்
சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்
மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்
உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம், ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.
முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம்.
பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

வருமான அதிகாரச் சட்டம்
வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்
உணவுப் பாதுகாப்புச் சட்டம்
அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்
பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்
தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்
புதிய மதுவரிச் சட்டம்
அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்
புன்வத் சட்டம்
வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்
டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்
கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்
பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம்
இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. “ எனத் தெரிவித்துள்ளார்.

நேரடி வரிகளை அதிகரித்து வரிச்சுமையை குறைக்க முடியும்

நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும். தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும்..

மேலும் தான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருகிறோம். அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பலன்களை எதிர்வரும் 2-3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி