மாகாண முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரங்களை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் எனவே

தான் அதனை தாமும் எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதன் போது அரசியலமைப்பு திருத்தங்களுக்காக சுதந்திர கட்சி பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்திருந்தது. இதன் போது 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் தயார் என்பதை தெரிவித்திருந்தோம்.

காணி ஆணைக்குழு, மாகாண காணி ஆணைக்குழுவாக செயற்படுமானால் எவ்வித சிக்கலும் இல்லை என்பதை நாம் அந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தோம்.

தற்போதும் மாகாண காணி ஆணைக்குழு காணப்படுகிறது. இதில் இறுதி தீர்மானத்தை எடுப்பது ஜனாதிபதியாவார். அதன் அடிப்படையிலேயே மாகாண காணி ஆணைக்குழுவும், தேசிய காணி ஆணைக்குழுவும் செயற்பட வேண்டும்.

இதில் எவ்வித தலையீடுகளும் இன்றி ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுமாக இருந்தால் எவ்வித சிக்கலும் இல்லை. அதே போன்று மாகாண பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவது சிறந்ததாகும்.

ஆனால் முதலமைச்சருக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாற்றுதல் மற்றும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான உரிமை வழங்கப்படக் கூடாது என்பதையும் நாம் வலியுறுத்தியிருந்தோம்.

அரசியல் ரீதியில் பொலிஸ் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்படக் கூடாது. எனவே யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

காரணம் சிங்கள மக்கள் மத்தியில் பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அச்சம் காணப்படுகிறது. எனவே தான் மாகாண முதலமைச்சர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி