மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் அனைவரும் அடிப்படைவாதிகளே என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
TNA கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படைவாத கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இணங்கியுள்ளதாக மொட்டு கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் பதில் வழங்கும் போதே நிதி அமைச்சர் மங்கள இதனைத் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“இவர்களோடு இருப்பவர்கள் அனைவருமே அடிப்படைவாதிகளே. உண்மையிலேயே இந்நாட்டில் ஜனநாயக அரசியலில் தொடர்ந்தும் செயற்படும் TNA கட்சியுடன் இணைந்து நாம் வெளிப்படையான அரசியலை முன்னெடுத்துச் செல்லுகின்ற போது இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அடிப்படைவாதிகள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்.
இது நேற்று இன்று இடம்பெற்ற இணைப்பு அல்ல. 2014ம் ஆண்டிலிருந்து ஒன்றாக வந்த பயணம் தற்போது முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்களை இணைத்துக் கொள்வோம். இந்நாட்டின் அனைத்து இனங்களையும் இணைத்துக் கொள்ளும் கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும்.
எனினும் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் மொட்டுக்காரர்கள் இன்று யாருடன் இணைந்திருக்கின்றார்கள்? ஒரு பக்கத்தில் ஈழக் கொடியை திருகோணமலையில் ஏற்றிய வரதராஜப் பெருமாள் அவர்களோடு இருக்கின்றார். எந்த சந்தர்ப்பத்திலும் சம்பந்தன்களோ, சுமேந்திரன்களோ, மாவை சேனாதிராஜாக்களோ இந்நாட்டினுள் ஈழக் கொடிகளை உயர்த்தவில்லை. இன்று பகிரங்கமாகவே கோட்டாபய ராஜபக்ஷவுடன் வரதராஜப் பெருமாள் இருக்கின்றார்.
மறு பக்கத்தில் அன்று எமது 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட போது எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளின் குழுவுக்குத் தலைமை தாங்கிய கருணா அம்மான் இன்று யாருடன் இருக்கின்றார்? கோட்டாவின் முகாமிலேயே அவர் இருக்கின்றார். அதே போன்று கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளை இயக்கிய பிள்ளையான் இன்று யாருடன் இருக்கின்றார்? கோட்டாவின் முகாமிலேயே இருக்கின்றார்
TNA வுடன் இரகசிய ஒப்பந்தங்கள் இல்லை! - நிதி அமைச்சர் மங்கள
