இலங்கையின் நிலையான வளர்ச்சித் திட்டத்தை நோக்கிய செயற்பாட்டுக்காக, நடைமுறை சாத்தியமானதும், எட்டக்கூடியதும்,

நியாயமானதும், சமமானதுமான வரி விதிப்பு முறைக்கு ஆதரவாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக அமுல்படுத்தப்படும் கடுமையான வரி விதிப்புகள், நடைமுறைக்கு மாறானது என்பதோடு, இது நிலையானது அல்ல என்பதை, தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள், விவாதங்கள் ஆகியவற்றிலிருந்து அவதானிக்க முடிவதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“பல்வேறு வரிகளை நிர்ணயித்து, செலுத்த முடியாதளவு வரிகளை விதிப்பைவிட, எவ்வளவு பணம் சேகரிக்க வேண்டும் என்ற நிதி இலக்கை அடைவதே அணுகுமுறையாக இருக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான மோசமான முடிவுகளின் பின்னர் இலங்கை தனது சொந்தக்காலில் நிற்பதற்குப் போராடிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதிக பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக நாட்டின் பொருளாதாரம் தள்ளாடி வருகிறது.

ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது, மிகுதிக் கொடுப்பனவு நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும், இருப்புக்களை நிரப்புவதற்கும், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணைக் கடன் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க வருமானம், 8.4% இலிருந்து 33 மாதங்களுக்குள் 15% அதிகரித்தது. இந்த அதிகரிப்பு வருமான இலக்குகளால் அடையப்பட்டதே தவிர, வரி செலுத்துவோரின் நிகர அடிப்படையிலான பரந்த வரிகளின் சதவீதத்தால் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க வருவாயில் உள்ள பற்றாக்குறையைச் சமாளிப்பதில் அதிக அனுபவமும் தொழில்ரீதியாக தயாரிக்கப்பட்ட அணுகுமுறையும் தேவை என்று கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
“இலங்கையர்கள் தாங்கள் செலுத்தும் வரி நியாயமானது அல்ல என்று நினைக்கின்றனர். தாம் செலுத்தும் வரிப் பணத்தை, அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வீண்விரயம் செய்வதுடன், சுரண்டுவதாக மக்கள் கருதுகின்றனர். மிகப் பெரிய சவாலான விடயம்.’’ என்றும் அவர் கூறினார்.

“அரசாங்கம் வரியாக அறவிடும் ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் செலவிடப்படுகிறது என்பதை மக்கள் மனதில் பதியச் செய்வது அவசியம்" என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார்.

"நாம் சுதந்திரம் அடைந்து 75 வருடங்களை நெருங்கிவிட்டோம். ஆனால் உண்மையிலேயே பொருளாதார சுதந்திரம் கிடைத்திருக்கிறதா?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“இலங்கையின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இந்த நேரத்தில், அதை வழமைக்கு கொண்டுவர அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒவ்வொரு இலங்கையரும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், வருமானத்தை ஈட்டுவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று ரவி கருணாநாயக்க கூறினார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி