நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா மனித பாவனைக்கு உகந்ததல்ல
. அவற்றில் சிறிய வண்டுகள் மற்றும் புழுக்கள் காணப்படுகின்றன. எனவே கோதுமை மா களஞ்சியசாலைகளில் துரித பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் , இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தைப் பரிசோதிக்கும் அதிகாரத்தை தர நிர்ணய சபைக்கு வழங்குமாறும் அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் வலியுறுத்தியுள்ளார்.


தரமற்ற கோதுமை மா இறக்குமதி செய்யப்பட்டு , மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வியாழக்கிழமை ப்ரீமா நிறுவனம் மற்றும் தர நிர்ணயசபை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அசேல சம்பத் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை தர நிர்ணயசபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை தர நிர்ணய சபைக்கு வழங்கப்பட வேண்டும். தர நிர்ணய சபைக்கு சுமார் 100 பொருட்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான அதிகாரம் மாத்திரமே காணப்படுகிறது.

ஆனால் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் சுமார் ஆயிரக்கணக்கான பொருட்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனார் தர நிர்ணயசபைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் மா தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடையாது. இது சிக்கல் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு கூட தெரியாது. இறக்குமதி தொடர்பான நிர்வாக அதிகாரியை சந்தித்து , இது தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா விலங்களுக்கு வழங்குவதற்கு பொறுத்தமானதாகவே காணப்படுகிறது. அது மனித பாவனைக்கு உகந்ததல்ல.

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவில் சிறு வண்டுகளும் , புழுக்களும் இனங்காணப்பட்டுள்ளன. எனவே கோதுமை மா களஞ்சியசாலைகளை பரிசோதிக்குமாறு ஜனாதிபதி , விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்ட அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.

நாட்டில் கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனமான பரீமா நிறுவன வளாகத்திலும் , தர நிர்ணய சபை வளாகத்திலும் நாளை வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

எமது ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள தயாராகுமாறு அவர்களுக்கு முன்னறிவித்தல் விடுக்கின்றோம். தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள மாவை அடுத்தடுத்த தேர்தல்களில் துண்டு பிரசுரங்களை ஒட்டுவதற்காக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி