அரச, தனியார், அரை அரச, பொது மற்றும் தோட்டத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பாரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

பெருந்தோட்டம், விவசாயம், மின்சாரம், கடற்றொழில், வங்கிகள், சுகாதாரம், துறைமுகங்கள், பொருளாதார நிலையங்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட நாட்டின் பல துறைகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளன. 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கித் துறையும் இணைந்துகொள்ள உள்ளது.

 திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என இலங்கை வங்கி ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் இடபெறவுள்ள நிலையில் நாளை நாட்டின் பல சேவைகள் பாதிக்கப்படும் எனவும் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரிய தாக்கம் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்களும் இலங்கை கல்வி சமூக சம்மேளனமும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். 

போராட்டத்துக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

 எவ்வாறாயினும், சுகாதார நிபுணர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு மணிநேரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், நாளைய தினம் மரக்கறி விநியோகம் இடம்பெறமாட்டாது என அகில இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய கூட்டமைப்பின் தலைவர் அருண சாந்த தெரிவித்துள்ளார். 

போராட்ட நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கருப்புப் பட்டி அணிந்து, தொழிலில் ஈடுபடுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன் நாளைய தினம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி