1200 x 80 DMirror

 
 

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும் வீதிகளில் வாகனங்கள் குறையவில்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



அத்துடன், இந்த நாட்டில் சாப்பிட இல்லாத மக்கள் என்று யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”சாப்பிட இல்லாத மக்கள் இந்த நாட்டில் இல்லை. அதனை நாம் ஏற்க வேண்டும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், வீதிகளில் வாகனங்கள் குறையவில்லை.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – ஹொரண வீதியின் 120 இலக்க பேருந்து மார்க்கத்தை விரிவுபடுத்தும் போது வீடுகளை இழந்தவர்களுக்கு, புதிய வீடுகளுக்கான திறப்புகளை வழங்கிய வைபவத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

''ஒன்றரை வருடம் வீடுகளில் அடைப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள். அந்தக் காலத்தில் செய்ய முடியாது போனதை தற்போது செய்ய முயற்சிக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தையும் தமது பொருளாதாரத்தையும் மக்களின் முழு சக்தியையும் செலுத்தி மக்கள் பெரும் அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள். நாட்டில் சீமெந்து பிரச்சினை இருப்பதை ஏற்க வேண்டும். ஆனால், மகிந்த யுகத்தின் பின்னர் அதிக அபிவிருத்தி நடைபெறுவது இந்த யுகத்தில் தான். மகிந்த ராஜபக்ச ஆட்சியின் பின்னர் அதிகமான வீதிகள் கோட்டாபய ஆட்சியிலேயே நிர்மாணிக்கப்படுகிறது. தனியார் துறையினர் அதிக கட்டுமானத்தை முன்னெடுத்தது மகிந்த ஆட்சியில் தான். அதைவிட அதிகமாக தற்போது கோட்டாபய ஆட்சியில் நடக்கிறது. வீதிகளை மேம்படுத்தும் போது அவர்களின் காலத்தில் செய்ய முடியாமல் போனதையிட்டு அவர்களுக்கு கவலை ஏற்படுகிறது. இதுதான் உண்மை நிலை.'' என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0203 Jonstan full

வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை கடந்த மகிந்த ஆட்சிக் காலத்தில் வெகுவாக முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் தற்போதைய அரசாங்கத்திலும் வீதி அபிவிருத்திக்கும், நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்கும், வீதிகளைப் புனரமைப்பதற்கும் பாரிய நிதி ஒதுக்கப்பட்டு அந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் பணிகளின் ஒப்பந்தங்கள் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், அமைப்பாளர்கள் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும், இதன்மூலம் பாரிய தரகுப் பணத்தை ஆளும் கட்சியினர் பெற்றுவருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மக்கள் மூன்று வேளை உண்பதற்குத் திண்டாடி வரும் நிலையில் கூட, தேர்தலை இலக்குவைத்து இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வீதிகளை அமைப்பதற்கு முன்னதாக நாட்டின் கொள்கைக் கோட்பாடுகள் வலுவாக இருக்க வேண்டும் எனவும், இதிலேயே தமது அரசாங்கம் கவனம் செலுத்தியதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் நாடு முழுவதும் ஒரு லட்சம் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்தார். பிரதேசங்களில் உள்ள தமது அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இந்த செயல் திட்டங்கள் பிரிக்கப்பட்டு, தேர்தலை மையப்படுத்தியே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் திறனற்ற நிர்வாகத்தினால் தற்போது டொலர் நெருக்கடி ஏற்பட்டு, எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து எவ்வாறு மீள்வது என்பதை ஆராய்வதற்குப் பதிலாக அரசாங்கம் வீதிகளைப் புனரமைப்பதில் கவனம் செலுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி